Army Chief: ``அமெரிக்க அதிபருக்கு கூட தெரியாது" - மாணவர்களிடம் மனம் திறந்து உரைய...
பீகார்: பிரசாந்த் கிஷோர் கட்சி நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு, கார் ஏற்றி படுகொலை - என்ன நடந்தது?
பீஹாரில் வரும் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி தொடர்ந்து நிதீஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளன.
இந்தத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் சார்பாக மொகாமா தொகுதியில் போட்டியிடுபவர் ஆனந்த் சிங். தற்போது இத்தொகுதியில் ஆனந்த் சிங் மனைவி எம்.எல்.ஏ.வாக உள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ.வான ஆனந்த் சிங், இம்முறை தானே இத்தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பாக போட்டியிடுகிறார்.

அதே நேரத்தில், இத்தொகுதியில் பிரசாந்த் கிஷோரின் “ஜன் சூரஜ்” கட்சி சார்பாக போட்டியிடுபவர் பியூஷ் பிரியதர்ஷி. அவருக்கு ஆதரவாக உள்ளூரில் மிகவும் பிரபலமான துலார்சந்த் யாதவ் (75) பிரசாரம் செய்து வந்தார். துலார்சந்த் யாதவ் முன்பு ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியில் இருந்தவர்.
ஆனால், அவரது உறவினர் வேறு கட்சியில் போட்டியிடுவதால், அவருக்காக யாதவ் பிரசாரம் செய்து வந்தார். இது ஆனந்த் சிங்கிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்பு இரு கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது கலவரம் ஏற்பட்டது. இருவரும் கல் வீசித் தாக்கிக்கொண்டனர்.
சம்பவ இடத்தில் ஆனந்த் சிங்
அந்த கலவரத்தில் துலார்சந்த் யாதவ் படுகொலை செய்யப்பட்டார். அவர் துப்பாக்கியால் சுட்டும், அவர் மீது வாகனம் ஏற்றியும் படுகொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்தப் படுகொலை நடந்த இடத்தில் ஆனந்த் சிங் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை கைது செய்ய மத்திய ஆயுத போலீஸ் படை ஈடுபடுத்தப்பட்டது.
அந்த படையினர் மொகாமா மற்றும் அதனையொட்டிய பார்ஹ் போன்ற பகுதிகளில் ரெய்டு நடத்தினர். இந்த தேடுதல் நடவடிக்கையில் இன்று அதிகாலை ஆனந்த் சிங்கும், அவரது ஆதரவாளர்களில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மூவரும் விசாரணைக்காக பாட்னாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனந்த் சிங் இக்கொலையில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இக்கொலைக்குப் பிறகு, துலார்சந்தின் சொந்த ஊரான தார்தார் கிராமத்தில் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆனந்த் சிங் ஆதரவாளர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களை மிரட்டிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் பேசுபவர்கள் உடனே கைது செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
துலார்சந்த் யாதவ் கொலை செய்யப்பட்டிருப்பது, யாதவ் சமூகத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்த் சிங்கை உள்ளூர் மக்கள் “சோட்டா சர்கார்” என்று அழைப்பார்கள். அவருக்கு எதிராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பாக வீனா தேவி போட்டியிடுகிறார். மொகாமா தொகுதியில் வரும் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ஆனந்த் சிங் இதே தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் ஆயுதத் தடுப்பு வழக்கில் அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதால், அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது மனைவி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பெண்கள் கைகொடுப்பார்களா?
இந்தத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதியளித்துள்ளது. அதோடு, பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10,000 வரவு வைத்துள்ளது.
தேர்தல் நேரத்தில் மக்களிடம் நேரடியாக பணம் வழங்குவதை விட, தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே முறையாக பெண்களுக்குப் பணம் கொடுத்துவிட்டால் அவர்கள் நிச்சயமாக ஓட்டுப்போடுவார்கள் என்ற நம்பிக்கையில், நிதீஷ் குமார் அரசு இந்தத் தொகையை வழங்கியுள்ளது.
மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைத்து வெற்றி பெற்றது போல, இதிலும் வெற்றி பெறலாம் என பா.ஜ.க.வும் நிதீஷ் குமாரும் நம்புகின்றனர். ஆனால், 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் நிதீஷ் குமார் அரசு மாநில வளர்ச்சிக்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.













