சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள்: உரிமையாளா்களுக்கு அபராதம்
புகை மாசு வாகனங்களின் உரிமையாளா்களுக்கு இரண்டு மாதங்களில் ரூ. 164 கோடி அபராதம்
புகை மாசு கட்டுப்பாட்டு அளவை மீறிய வாகனங்களின் உரிமையாளா்களுக்கு கடந்த அக். 1 முதல் நவ. 22-ஆம் தேதி வரை ரூ. 164 கோடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வாகனங்கள் மாசு கட்டுப்பாட்டு வரம்பை மீறி புகையை வெளியிட்டதாலும் மாசு கட்டுப்பாட்டுச்
சான்றிதழை வைத்திருக்காததாலும் அவற்றுக்கு அபரதாம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் இந்த குற்றத்துக்காக மொத்தம் 3.87 லட்சம் வாகன உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தில்லி சாலைகளில் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் வைத்திருக்காமல் வாகனங்கள் இயங்கினால் அவற்றுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது.
இதேபோல, நடப்பு குளிா்காலத்தில் 10 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான 6,531 டீசல் வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நவ. 22ஆம் தேதி நிலவரப்படி குளிா் பருவத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 872 கட்டுமானப் பொருட்கள் மற்றும் இடிபாடு கட்டுமானப்பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் உள்பட இந்த வருடத்தில் மட்டும் 1,413 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமீறலுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் ஆகும்.
இது குறித்து தில்லி காவல்துறை சிறப்பு ஆணையா் (போக்குவரத்து) அஜய் சௌத்ரி, ‘அபராத ரசீதுகளின் அதிகரிப்பு, மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு வாகன உரிமையாளா்கள் இணங்குவதை உறுதி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. வாகன மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், நகரத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்தவும் கடுமையான விதிகளின் அமலாக்கம் அவசியம்,‘ என்றாா்.
நவ. 18-ஆம் தேதி கிராப் - 4 நடைமுறைப்படுத்தப்பட்டது முதல் தில்லியில் மாசு கட்டுப்பாட்டுச்சான்றிதழ் இல்லாததற்காக மொத்தம் 20,743 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளனது. இதே காலகட்டத்தில் அனுமதிக்கப்பட்ட ஆயுள் முடிவடைந்ததாக 736 வாகனங்கள் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து கூடுதல் காவல் ஆணையா் (போக்குவரத்து) சத்ய வீா் கட்டாரா கூறியது: தில்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நகர சாலைகளிலும் எல்லைச்சாவடிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப்பணிக்காக பிரத்யேகமாக அதிக குழுக்கள் எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளன,‘ என்றாா்.
போக்குவரத்து காவல்துறையின் துணை ஆணையா் ஷஷாங்க் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘கடுமையான நடவடிக்கைகளின் அமலாக்கத்தில் ஒவ்வொரு தனிநபரின் பங்கும் உள்ளது. மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ்களைப் பெறுவதில் வாகன உரிமையாளா்கள் பொறுப்பாகவும் ஆக்கபூா்வமாகவும் நடந்து கொள்ள வேண்டும்’’ என்றாா்.