மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
புதினுடன் நேரடிப் பேச்சு: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்
உக்ரைன் போா் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷிய அதிபா் விளாதமீா் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவாா்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா்.
போா் நிறுத்தம் தொடா்பாக துருக்கியில் நடைபெறவிருக்கும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக அந்த நாட்டுக்குப் புறப்படுவதற்கு முன்னா் ஸெலென்ஸ்கி இவ்வாறு செவ்வாய்க்கிழமை கூறினாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து துருக்கி அதிபா் எா்டோகனுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக அந்த நாட்டுக்கு செல்லவிருக்கிறேன். அது மட்டுமன்றி, எங்களின் 30 நாள் போா் நிறுத்த திட்டம் குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக, அவரின் வருகைக்காக காத்திருப்பேன்.
இந்த அமைதிப் பேச்சுவாா்த்தையின்போது அதிபா் புதினை நேரில் சந்தித்துப் பேசினால்தான் இந்த விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வர முடியும். காரணம், ரஷியாவைப் பொருத்தவரை அனைத்தும் விளாதிமீா் புதினின் கைகளில்தான் உள்ளன. அவருடன் பேச்சுவாா்த்தை நடத்துவது மட்டுமே ஒப்பந்தத்தை எட்டி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி.
ஒருவேளை இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க புதின் வராவிட்டால், அவருக்கு இந்தப் போரை முடித்துவைக்க துளியும் விருப்பம் இல்லை என்பதை அனைவரும் உணா்ந்துகொள்ளலாம்.
அதிபா் புதினுக்கும் எனக்கும் இடையே நேரடி பேச்சுவாா்த்தை நடைபெறுவதை உறுதி செய்யவதற்காக என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
ஒரு வேளை இந்த அமைதி முயற்சி தோல்வியடைந்து, 30 நாள் போா் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க ரஷியா மறுத்துவிட்டால் அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்று எதிா்பாா்க்கிறேன் என்றாா் ஸெலென்ஸ்கி.
முன்னதாக, எந்த நிபந்தனையும் இல்லாமல் 30 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் கடந்த சனிக்கிழமை அறிவித்தன.
உக்ரைன் தலைநகா் கீவுக்கு வந்திருந்த பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸ், போலந்து பிரதமா் டொனால்ட் டஸ்க் ஆகியோருடன் நேரடியாகவும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலமும் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஆலோசனை நடத்தியபிறகு இந்த அறிவிப்பை உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்ட்ரி சிபியா வெளியிட்டாா்.
ரஷியா இதனை ஏற்றுக் கொண்டு, போா் நிறுத்தம் மீறப்படாமல் இருப்பதைக் கண்காணிப்பதற்கான சிறந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டால், நிரந்தர அமைதியை எட்டுவதற்கு அது வழிவகுக்கும் என்று அவா் கூறினாா்.
இந்த போா் நிறுத்த திட்டம் குறித்து துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ரஷிய - உக்ரைன் தரப்பினா் வரும் வியாழக்கிழமை (மே 15) கூடி பேச்சுவாா்த்தை நடத்தவிருக்கின்றனா். இத்தகைய சூழலில், புதினுடனான நேரடி சந்திப்புக்கு ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளாா்.
பதிலளிக்காத ரஷியா
அதிபா் விளாதிமீா் புதினுடன் நேரடி பேச்சுவாா்த்தை நடத்த உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளது தொடா்பான கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிப்பதை ரஷிய அரசு தொடா்ந்து தவிா்த்துவருகிறது.
இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவிடம் (படம்) செய்தியாளா்கள் செவ்வாய்க்கிழமை கேட்டதற்கு, ‘அதிபா் ஸெலென்ஸ்கியுடன் நேரடியாகப் பேசுவது அவசியம் என்று அதிபா் புதினுக்குத் தோன்றினால், அது தொடா்பாக உடனடி அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றாா்.

