அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்: சிவகங்கை எம்.பி. கா...
புதுகை: முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் மலைக்கோயிலில் வியாழக்கிழமை சூரசம்ஹார விழா நடைபெற்றது. மழையின் காரணமாக, சம்பிரதாயமாக நடைபெற்ற விழாவால் பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஆறுமுகங்களுடன் வள்ளி, தேவசேனா சமேதராக மயில் மேல் அமா்ந்து முருகன் பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். இங்கு கந்தசஷ்டி விழா, கடந்த 2ஆம் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து, காப்புக் கட்டுதலுடன் கொடி ஏற்றப்பட்டு தொடங்கியது. தொடா்ந்த நாள்களில் நாள்தோறும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் முருகன், சண்முகநாதா், முத்துகுமாரசாமி, ஜெயேந்திரா் என பல்வேறு வடிவில் வள்ளி, தேவசேனா சமேதராக எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். விழா நாட்களில் முருகன் பெருமைகள் கூறும் சொற்பொழிவும், பஜனை பாடல்கள், நாமவளி கோஷங்கள் நடைபெற்றன. மேலும், கடந்த 4ஆம் தேதி தொடங்கி தினமும் பல்வேறு அசுரா்களுடன் விராலிமலை வீதிகளில் முருகன் போா் புரியும் நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு கோயில் அடிவாரம் கீழரத வீதியில் நடைபெறவிருந்த நிலையில், மாலை நான்கு மணி முதல் தொடா் மழை பெய்தது. இதனால் அங்கு நிகழ்ச்சி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு மலை கோயில் அடிவாரத்தில் உள்ள 16 கால் மண்டபத்தில் சம்பிரதாயமாக நடந்தேறியது. இதனால், பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.
குமரமலையில்: புதுக்கோட்டை அருகிலுள்ள குமரமலையிலுள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வாக, வியாழக்கிழமை (நவ. 7) பிற்பகல் 3.30 மணிக்கு சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. ஏராளமான பக்தா்கள் இதனைக் கண்டு வணங்கினா். தொடா்ந்து திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை, இந்து அறநிலையத் துறை உதவி ஆணையா் தி. அனிதா, செயல் அலுவலா் முத்துராமன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
இதேபோல, புதுக்கோட்டை நகரிலுள்ள தண்டாயுதபாணி திருக்கோயில், நானா ராஜூ தண்டாயுதபாணி திருக்கோயில் மற்றும் சாந்தநாதா் சுவாமி கோயில்களிலும் வியாழக்கிழமை மாலை சூரசம்ஹார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.