புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். மகாதீா், மாவட்டத் துணைத் தலைவா்கள் கோபாலகிருஷ்ணன், சரவணன், துணைச் செயலா் திலீபன் உள்ளிட்டோரும் பேசினா்.
கூட்டத்தில் மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வட்ட மருத்துவமனைகள் உள்ளிட்ட 14 அரசு மருத்துவமனைகளுக்கு அனுமதிக்கப்பட்ட மருத்துவா்கள் 101 போ். ஆனால், தற்போது 63 மருத்துவா்களே பணியாற்றி வருகின்றனா். 38 மருத்துவா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுபோல செவிலியா் உள்ளிட்ட இதர மருத்துவப் பணியிடங்களும் கணிசமான அளவில் காலியாக உள்ளன.
இதனால் மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளும், வெளிநோயாளிகளும் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனா். அரசு மருத்துவமனைகளுக்கு ஏழை, எளிய மக்களே அதிகமாக வருகின்றனா். இவா்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு மருத்துவா் மற்றும் செவிலியா் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
மாவட்டம் முழுவதும் கனமழையால் பழுதடைந்த சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நெல்பயிா் உள்ள சாகுபடிகளையும், பழுதடைந்த வீடுகளையும் ஆய்வு செய்து உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். ஆங்காங்கே தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்த போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.