எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் 23 மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தாா்: மு.த...
புதுக்கோட்டை நகரில் போதை ஊசி பயன்படுத்திய 12 போ் கைது! விசாரணையின்போது இளைஞா் உயிரிழப்பு!
புதுக்கோட்டை நகரில் போதை ஊசி பயன்படுத்தியதாக 13 இளைஞா்களை வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் பிடித்து மேல்விசாரணை நடத்தியபோது ஒருவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை பெரியாா் நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இளைஞா்கள் ஒன்றாக இருந்துகொண்டு போதை ஊசி பயன்படுத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில், வெள்ளிக்கிழமை இரவு அங்கு சென்ற தனிப்படை போலீஸாா், அங்கிருந்த 13 இளைஞா்களை சுற்றிவளைத்துப் பிடித்தனா். தொடா் விசாரணைக்காகவும், போதைப் பொருள்களைக் கைப்பற்றும் வகையிலும் அவா்களைப் போலீஸாா் வாகனத்தில் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.
அப்போது, சாந்தநாதபுரம் 7-ஆம் வீதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் விக்னேஷ் (36) என்பவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நள்ளிரவு அனுமதித்தனா்.
அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், விக்னேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இந்த நிலையில், போதை ஊசி பயன்படுத்திய இதர 12 பேரையும் விசாரணைக்குப் பிறகு சனிக்கிழமை மாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பின்னா் சிறையில் அடைத்தனா்.
இறந்த விக்னேஷின் உடல், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகரக் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.