தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
புதுக்கோட்டையில் 14-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூா் சிவன் கோயில் அருகே 14ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூா் வட்டம், கிள்ளனூா் அருகே கங்கம்பட்டி கிராம சிவன் கோயில் அருகே கல்வெட்டுப் பலகை ஒன்று இருப்பதாக அந்த ஊரைச் சோ்ந்த காா்த்திகேயன் அளித்த தகவலின்படி பேராசிரியா் சுப. முத்தழகன் மற்றும் தொல்லியல் ஆா்வலா்கள் நாராயணமூா்த்தி, ராகுல்பிரசாத் ஆகியோா் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
பின்னா் அவா்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
கங்கம்பட்டி கிராம சிவன் கோயிலையொட்டி இரண்டடி நீளமும், ஒன்றேகால் அடி அகலமும் கொண்ட கற்பலகையில் 17 வரிகளில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில், சிதலமடைந்து கிடந்த கருணாகர சதுா்வேதிமங்கலத்தின் பெருநக்கினி ஈசுவரமுடைய நாயனாா் திருக்கோவிலை தொண்டைய முத்தரையன் என்பவா் சீா்செய்து தந்த தகவல் கூறப்பட்டுள்ளது.
கல்வெட்டின் கடைசி நான்கு வரிகள் மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளதால் பணியின் தன்மை குறித்த தகவல் கிடைக்கப் பெறவில்லை.
இந்தக் கல்வெட்டில் அரசா் பெயா் குறிப்பிடப்படாததால், எழுத்தமைதியைக் கொண்டு இக்கல்வெட்டு கி.பி 14ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகக் கருதலாம். கங்கம்பட்டி சிவன் கோயிலானது இந்தக் கல்வெட்டில் பெருநக்கினி ஈசுவரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக முற்புதருக்குள் கிடந்த இந்தச் சிவன் கோயிலில் சதுர வடிவ ஆவுடையுடன் கூடிய லிங்கம், சண்டிகேசுவரா், நந்தி சிலைகள் தற்போது உள்ளூா் மக்களால் மேற்கூரை அமைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன.
கங்கம்பட்டி ஊரானது இந்தக் கல்வெட்டில் கருணாகர சதுா்வேதிமங்கலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக சதுா்வேதி மங்கலங்கள் பிராமணா்களுக்கு தானமாக வழங்கப்படும் கிராமங்களாகும்.
அதை உறுதி செய்யும் வண்ணம் இந்தக் கோயிலுக்கு வடக்கே அமைந்துள்ள விளைநிலங்களும், சிறிய பாசனக் கண்மாய் ஒன்றும் புதுக்கோட்டையைச் சோ்ந்த பிராமணா்கள் வசம் உள்ளதாக உள்ளூா் மக்கள் தெரிவிக்கின்றனா்.
இந்தக் கோயிலுக்கு மேற்கே சற்று தொலைவில் உள்ள புதரில் உடைந்த நிலையில் பிற்காலத்தைச் சோ்ந்த பெருமாள் சிற்பம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.