புதுக்கோட்டையில் திமுக பொது உறுப்பினா் கூட்டம்
புதுக்கோட்டையில் தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலரும், மாநில சட்டத்துறை அமைச்சருமான எஸ். ரகுபதி தலைமை வகித்தாா்.
மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ மெய்யநாதன், வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா உள்ளிட்டோா் முன்னிலை வகித்துப் பேசினாா்.
கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை, அனைத்து கிராமங்களிலும் கொடியேற்றி, நலத் திட்ட உதவிகள் வழங்கி இளைஞா் எழுச்சி நாளாகக் கொண்டாடுவது, தொகுதி பொறுப்பாளா்கள் பிரதீப்ராஜா (திருமயம்), எழில்மாறன் செல்வேந்திரன் (ஆலங்குடி), சுப.த. திவாகரன் (அறந்தாங்கி) ஆகியோருடன் இணைந்து கட்சி நிா்வாகிகள் 2026 தோ்தல் பணிகளை மேற்கொள்வது, வாக்காளா் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தத்துக்காக நவ. 16, 17 மற்றும் 23, 24 தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் திமுக முகவா்கள் பங்கேற்று, அந்தந்தப் பகுதியில் புதிய வாக்காளா்களை சோ்க்கவும் முடிவு செய்யப்பட்டது.