நெல்லை: லஞ்சப் புகாரில் சிக்கவைக்க சதி; மேலும் இருவர் கைது- செல்போன் உரையாடலால் ...
புதுச்சேரி: தவெக பொதுகூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; திடுக்கிட்ட போலீஸ் - என்ன நடந்தது?
புதுச்சேரி, உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று தவெக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்துக்கு இன்று காலை 7.30 மணி முதல் தொண்டர்கள் வர தொடங்கினர். அவர்களை போலீஸார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து, கியூ ஆர் கோடு பாஸ் பரிசோதனை செய்து அனுமதித்தனர். அப்படி கூட்டத்துக்கு வந்திருந்த ஒருவரை சோதனை செய்தபோது, அவரிடம் துப்பாக்கி இருந்தது. அதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இடத்தில் பரபரப்பும் ஏற்பட்டது.
இது தொடர்பாக அந்த நபரிடம் விசாரித்தபோது, தன்னுடைய துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதாகக் கூறி, அதை போலீஸாரிடம் காண்பித்திருக்கிறார்.

ஆனால் போலீஸார், `தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு புதுவையில் அனுமதியில்லை. பொதுக்கூட்டத்துக்கு ஏன் துப்பாக்கி எடுத்து வந்தீர்கள்?' என கேள்வி எழுப்பினர். மேலும் அவரிடம் விசாரணை நடத்த ஓதியஞ்சாலை காவல் நிலையத்துக்கு அந்த நபரை அழைத்துச் சென்றனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் என்பதும், மத்திய சி.ஆர்.பி.எஃப் படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், டேவிட் தற்போது த.வெ.க-வின் சிவகங்கை கிழக்கு மாவட்டச் செயலாளர் டாக்டர் பிரபுவின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக பணியில் உள்ளார்.
டாக்டர் பிரபுவின் பாதுகாப்புக்கு, அரசு அனுமதியுடன் 2 பேர் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர்தான் டேவிட் என்பதும், பிரபு புதுவை பொதுக்கூட்டத்துக்கு வந்ததால் அவரின் பாதுகாப்புக்காக உடன் வந்ததும் தெரியவந்தது.
இந்தச் சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.












