``அந்த பாச்சா எதுவும் பலிக்காது; இதுதான் எங்கள் அரசியல்'' - மதுரையில் முதல்வர் ஸ...
புதுச்சேரி: `போலி மருந்து வழக்கு' சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவு; கலக்கத்தில் ரௌடிகள்
இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான `சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி-க்கு புகார் அளித்தது. அதன்படியில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் மற்றும் திருபுவனைப் பாளையம் தொழிற்பேட்டைகளில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வு செய்தனர்.
அப்போது ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் லார்வன் ஃபார்மா என்ற இரண்டு மருந்து தொழிற்சாலைகளும் உரிய அனுமதி பெறாமல் போலி மருந்துகளை தயாரித்தது தெரிய வந்தது.

அவற்றை உடைத்து சோதனை செய்த போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி உயிர் காக்கும் மருந்துகளும், தயாரிப்பு இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
தயாரிப்பு இயந்திரங்கள் மற்றும் போலி மருந்துகளின் மதிப்பு சுமார் ரூ.500 கோடிக்கும் மேலானவை என்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், சன் ஃபார்மா, டாக்டர் ரெட்டிஸ் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை போலியாக தயாரித்து நாடு முழுவதும் விநியோகித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சுமார் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக போலி மருந்துகளை விநியோகித்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மெய்யப்பன், ராணா என்ற இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதே சமயம், முக்கிய குற்றவாளியான மதுரை ராஜா உள்ளிட்ட 10 பேர் தலைமறைவாக உள்ளனர்.
மதுரை ராஜா, விவேக் ஆகிய இருவர் புதுச்சேரி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுவிட்டனர், மற்றவர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
அதேபோல், எதிர்கட்சியான தி.மு.க 08.12.2025 அன்று போராட்டம் அறிவித்துள்ளது. அதேசமயம், புதுச்சேரியில் தற்போது ஆட்சியில் உள்ள சிலர் மற்றும் காவல்துறையின் கீழ்மட்ட அதிகாரிகளின் சிலரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
அதையடுத்து, 10 பேர் கொண்ட சிறப்பு புலாய்வுக் குழுவை (SIT – Special Investigation Team) அமைத்து உத்தரவிட்டுள்ளார் புதுச்சேரி காவல்துறை தலைவர் ஷாலினி சிங்.
தற்போது கடலோர பாதுகாப்பு (Coastal Security) காவல் கண்காணிப்பாளராக இருக்கும் நல்லம் கிருஷ்ணராய பாபு தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் அந்தக் குழுவில், இன்ஸ்பெக்டர் பாபுஜி (CBCID PS), எஸ்.ஐ. ராஜேஷ் (ANTF), எஸ்.ஐ. சௌந்தரராஜன் (ARS), மேட்டுப்பாளையம் காவல் நிலைய எஸ்.ஐ. சிவகுமார், SGASI வெங்கட்ராமன் (ANTF), SGHC இளந்தமிழன் (CBCID), SGHC மூவரசன் (ANTF) போன்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போலி மருந்துகள் வழக்கில் தொடர்புடைய மாநிலங்கள், அவற்றிற்கிடையே நடந்த பணப்பரிமாற்றங்கள், சமூக விரோதிகள், ரௌடிகள் போன்றவர்களுடன் உள்ள தொடர்புகள் போன்றவற்றை இந்தக் குழு முழுமையாக விசாரிக்கும்.
அதிமுக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், அனைத்து காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இந்தக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால், போலி மருந்துக் கும்பலுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகளும், ரௌடிகளும் கலக்கத்தில் இருக்கின்றனர்.















