புவனேசுவரத்தில் நவ.29-டிச. 1 வரை டிஜிபிக்கள் மாநாடு: பிரதமா் மோடி, உள்துறை அமைச்...
புதுச்சேரி: `ப்ளீஸ் அண்ணா விட்ருங்க..’ - கெஞ்சிய சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!
மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த 16 வயது சிறுமி மனீஷா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி குடும்பத்தினருடன் புதுச்சேரியிலுள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு வந்த அவர், 30-ம் தேதி பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பாமல் மாயமானார். நீண்ட நேரமாகியும் மனீஷா வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர், இரவு முழுவதும் அவரை தேடினர். ஆனால் எங்கும் அவர் கிடைக்காததால் மறுநாள் 31-ம் தேதி, பெரியகடை காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், சிறுமியை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். அதற்கு மறுநாள் நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரி கடற்கரையில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸார், மது போதையுடன் நின்றிருந்த சிறுமி மனீஷாவை மீட்டனர்.
அப்போது அவர் சோர்வாக காணப்பட்டதால், போலீஸார் உடனே அவரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிறுமி மனீஷா கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. அதையடுத்து புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதியான கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த 43 வயது ஆட்டோ ஓட்டுநர் காஜா மொய்தீன் என்பவரையும், சென்னையைச் சேர்ந்த மூன்று பேரையும் போலீஸார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ``மீட்கப்பட்ட சிறுமியிடம் நாங்கள் விசாரணை செய்த போது, தன்னை ஒருவர் ஆட்டோவில் ஏற்றிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டார். அதனடிப்படையில் அவர் குறிப்பிட்ட பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம்.
அப்போது ஒரு கேமராவில் ஆட்டோ ஒன்றில் சிறுமியை ஏற்றிச் செல்லும் வீடியோ காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த ஆட்டோவின் எண்ணை ஆய்வு செய்ததில், அது கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த காஜா மொய்தீன் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. அதனடிப்படையில் அவரை கைதுசெய்து விசாரணை செய்தோம். வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியே வந்த சிறுமி எங்கு செல்வது என்று தெரியாமல், சாலையில் நடந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் சென்ற காஜா மொய்தீன், சிறுமியிடம் அன்பாக பேசி புதுச்சேரியை சுற்றிக் காட்டுவதாகக் கூறி ஆட்டோவில் ஏற்றியிருக்கிறார். அதையடுத்து அந்த சிறுமியை ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று, அவருக்கு மது வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு மது போதையில் இருந்த அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
அத்துடன் நிற்காமல் சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்ற அவர், தன் மனைவியிடம், சிறுவன் வழிதவறி வந்துவிட்டான் என்று கூறி வீட்டில் ஒரு அறையில் தங்க வைத்திருக்கிறார். மனீஷா பாப் கட்டிங் வெட்டியிருந்ததால், காஜா மொய்தீனின் மனைவி அவரை சிறுவன் என்றே நம்பியிருக்கிறார். இரவு அனைவரும் தூங்கியபிறகு, மனீஷாவுக்கு மீண்டும் மதுவை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன்பிறகு 31-ம் அதிகாலை 2 மணிக்கு மனீஷாவை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற காஜா மொய்தீன், வேறு ஒரு விடுதியின் வாசலில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்திருந்த மூன்று பேர், மது போதையில் இருந்த அந்த சிறுமியிடம் ஆறுதலாகப் பேசி, கோட்டக்குப்பம் கடற்கரைப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அப்போது அவர்களும் சிறுமிக்கு மது வாங்கிக் கொடுத்து, அங்கேயே ஒரு அறை எடுத்து, மூன்று பேரும் அவரை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அத்துடன் விடாமல் மதுபோதையில் இருந்த அந்த சிறுமியை தங்களுடைய காரில் ஏற்றி சென்னைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கும் ஒரு விடுதி அறையில் அடைத்து வைத்து மூன்று பேரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அப்போது `ப்ளீஸ்னா என்னை விட்ருங்க..’ என்று சிறுமி கதறியிருக்கிறார். அப்படியும் அவர்கள் மனமிறங்காமல் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதன் பிறகு ஒரு வாடகைக் காரில் சிறுமியை ஏற்றி, புதுச்சேரிக்கு தனியாக அனுப்பி வைத்திருக்கின்றனர். சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சென்னையைச் சேர்ந்தவர்கள் அவரை அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அதனால் அவர்களும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் என்பது உறுதியானது.
அதனால் சென்னையில் இருந்து சிறுமியை அழைத்து வந்த வாடகைக் காரை கண்டிபிடித்து, அதை `புக்’ செய்தவர்களின் விபரங்களை கண்டுபிடித்தோம். அதை வைத்து சென்னையைச் சேர்ந்த மூன்று பேரையும் கைது செய்து விசாரணை செய்ததில், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கின்றனர்” என்றனர்.
கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மற்றும் சென்னையைச் சேர்ந்த மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பெரியகடை போலீஸார், அவர்களை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். அதேபோல பாதிக்கப்பட்ட சிறுமியையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்த சிறுமியை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரின் வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்தார். அந்த விசாரணையும், வாக்குமூலமும் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. 16 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், ஒட்டுமொத்த புதுச்சேரியையும் அதிர வைத்திருக்கிறது.