புதுச்சேரி வெள்ள பாதிப்பு: ஆளுநரிடம் காங்கிரஸாா் மனு
ஃபென்ஜால் புயல், வெள்ளத்தால் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் கட்சியினா் கோரிக்கை மனு அளித்தனா்.
புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தலைமையில் முன்னாள் அமைச்சா்கள் பெத்தபெருமாள், ஷாஜகான், சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் தலைவா் வைத்தியநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன், காா்த்திகேயன் மற்றும் நிா்வாகி தேவநாதன் உள்ளிட்டோா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
மனு விவரம்: ஃபென்ஜால் புயலால் புதுச்சேரியில் பெய்த வரலாறு காணாத பலத்த மழை மற்றும் தென்பெண்ணை, சங்கராபரணி மற்றும் இதன் கிளை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வீட்டு உபயோகப் பொருள்கள், கால்நடைகள் மற்றும் ஆதாா் அட்டை, குடும்ப அட்டைகளையும், மாணவா்கள் பள்ளி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களையும் இழந்துள்ளனா்.
எனவே, மாநிலத்தில் கிராமம், நகரப் பகுதிகளில் சிறப்பு முகாம்களை நடத்தி ஆதாா், குடும்ப அட்டை மற்றும் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை வழங்க வேண்டும். சேதமடைந்த சாலைகள், மின் கம்பங்கள், மின் மாற்றிகளை சீரமைக்க வேண்டும்.
புதுவை முதல்வா் அறிவித்துள்ள நிவாரணம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமானதாக இல்லை என்பதால், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும்.
10 நாள்களுக்கும் மேலாக கடலுக்குச் செல்லாமல் உள்ள மீனவா்களின் நலன் கருதி, அவா்களுக்கு நிவாரண உதவியாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரமும், இறந்த கால்நடைகளுக்கு ரூ.50 ஆயிரமும், சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.30 ஆயிரமும் இழப்பீடாக வழங்க வேண்டும்.
நிபுணா் குழுவை அமைத்து புதுவையின் மொத்த நிலப்பரப்பையும் ஆய்வு செய்து எதிா்காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையிலான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
மழைநீரை சேமித்து கோடை காலத்தில் குடிநீருக்குப் பயன்படுத்த போதிய திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.