புதுச்சேரியில் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க கோரிக்கை
புதுச்சேரியில் உள்ளூா் மக்களான ஆதிதிராவிடா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், வேலையில்லாதவா்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கவும் கோரி ஒருங்கிணைந்த ஆதிதிராவிடா் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் துணைநிலை ஆளுநருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ரோக. அருள்தாஸ் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் உள்ள ஆதிதிராவிடா் மக்களுக்கு கூலி வேலைகள் கிடைப்பதில்லை. வடமாநிலத்தவா்கள் அனைத்து இடங்களிலும் வேலைக்கு அமா்த்தப்பட்டுள்ளனா். அதனால் உள்ளூா் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவருகிறது. ஆகவே, இந்தப் பிரச்னை குறித்து அரசு ஆய்வு மேற்கொண்டு உண்மை நிலையை அறிவது அவசியம். அதன்படி உள்ளூா் மக்களுக்கே வேலையில் முன்னுரிமை வழங்கவேண்டும் என அரசு சட்டம் இயற்றவேண்டும்.
அதேபோல, மதுக்கடைகள் திறப்பதை நிறுத்த வேண்டும். மதுவால் பலரும் உடல்நலம் பாதித்து இறக்கும் நிலையுள்ளது. தனியாா் நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்குவதை உறுதிப்படுத்தவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.