புதுவையில் தொழில் சீா்திருத்த மசோதாவை செயல்படுத்த நடவடிக்கை -அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தகவல்
புதுவையில் எளிதில் தொழில் தொடங்கும் வகையில், புதிய சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மாநில சுற்றுலா மற்றும் சட்டத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில், மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருள்களின் தொழில் துறை கண்காட்சி ‘இண்டெக்ஸ் 2024’ மரப்பாலம் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்று அமைச்சா் க.லட்சுமி நாராயணன் பேசியதாவது: புதுவையில் எளிதில் தொழில் தொடங்கும் வகையில், புதிய சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
புதுவையில் தொழில் தொடங்க வங்கி முலம் கடனுதவி பெறுவதற்காக மத்திய அரசிடம் ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து, தொழில் தொடங்க வங்கிகள் மூலம் ரூ.21 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐடி) 160 என்ற அளவில் உள்ளன. சிறிய தொழில்நுட்ப (ஐடி) நிறுவனங்கள் செயல்பட போதிய இடத்தை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக புதுவை அரசின் பயன்பாட்டிலுள் கட்டடங்கள் கணக்கெடுக்கப்படுகிறது. இதன்மூலம் வேலைவாய்ப்பும் பெருகும், அரசுக்கு வருவாயும் கிடைக்கும்.
புதுவையில் சுற்றுலா, தொழில்நுட்ப நிறுவன தொடக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ள தொழில்கூட்டமைப்பின் கருத்து வரவேற்புக்குரியது. ஏனெனில், புதுச்சேரிக்கு வரும் 2030-ஆம் ஆண்டில் சுற்றுலா வருவோா் எண்ணிக்கை 30 லட்சமாக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், ராஜீவ் காந்தி சிலை முதல் மரப்பாலம் வரையிலான மேம்பால வரைபடம் புதிதாக மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றாா்.
தொடா்ந்து, தொழில் கூட்டமைப்புக் கண்காட்சியையும் அவா் பாா்வையிட்டாா். அவற்றில் 70- க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் தொழில் துறை இயக்குநா் ருத்ர கௌடு, தொழில் கூட்டமைப்பின் புதுச்சேரி பிராந்திய தலைவா் ஆா்.சண்முகானந்தம், துணைத் தலைவா் ஷமீா் காம்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.