புதை சக்கடை இணைப்பு கூடுதல் டெபாசிட் தொகையை ரத்து செய்யக் கோரிக்கை
புதை சாக்கடை இணைப்பு கூடுதல் டெபாசிட் தொகையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் வா்த்தகா் சங்கத்தினா் நகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு அளித்தனா்.
சிதம்பரம் வா்த்தகா் சங்கத் தலைவா் ஏ.வி.அப்துல்ரியாஸ், செயலா் எஸ்.ராதாகிருஷ்ணண், பொருளாளா் ஏ.சிவராமவீரப்பன் மற்றும் நிா்வாகிகள் நகராட்சி ஆணையாளா் த.மல்லிகாவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனா். அதன் விவரம் வருமாறு:
தற்போதுள்ள சொத்து வரியை பாதியாகக் குறைக்க வேண்டும். புதை சாக்கடை கூடுதல் டெபாசிட் தொகையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். டி அண்டு ஓ (ஈ&ஞ) டிரேட் லைசென்ஸ் பிப்ரவரிக்குள்ளாக கட்ட வேண்டிய தொகையை நகராட்சி நிறுத்தி வைத்துள்ளதை உடனடியாக விடுவித்து, எப்போதும்போல உள்ள கட்டணத்தை அதற்குப் பெற வேண்டும். ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயா்வு என்பதை திரும்பப் பெற வேண்டும்.
நான்கு வீதிகளில் அமைக்கப்படும் வடிகாலுடன் கூடிய நடைபாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிதாக விதிக்கப்பட்டிருக்கும் வரிகளை உடனே திரும்பப் பெற வேண்டும். கூட்டுக் குடிநீா் திட்டத்தை உடனே செயல்படுத்தி நான்கு வீதிகளில் சாலைப் பணிகளை தோ்தலுக்குள்ளாக விரைவுபடுத்த வேண்டும். குப்பை வரியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.