தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
புனே: இரு லாரிகளிடையே சிக்கி தீப்பிடித்த கார் - 8 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்
புனே - பெங்களூரு இடையே பும்கர் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் டிரைலர் லாரி ஒன்று வாகனங்கள் மீது மோதிக்கொண்டது. இதனால் ஒன்றின் மீது ஒன்று மோதி 13 வாகனங்கள் இதில் சேதம் அடைந்தன. விபத்தில் சிக்கிய ஒரு காரை லாரி சிறிது தூரம் இழுத்துச்சென்றது. அந்நேரம் எதிர்திசையில் இருந்து வந்த மற்றொரு லாரி மீது காரை இழுத்து வந்த லாரி மோதிக்கொண்டது. இதில் இரண்டு லாரிகளுக்கு இடையே கார் சிக்கிக்கொண்டு அப்பளம் போன்று ஆனது. இதனால் காரில் இருந்து சி.என்.ஜி காஸ் டேங்க் உடைந்து தீப்பிடித்துக்கொண்டது. காரில் 3 வயது குழந்தை உட்பட 5 பேர் இருந்தனர். அவர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
லாரியில் இருந்த டிரைவர் மற்றும் கிளீனரும் இந்த தீயில் கருகி இறந்தனர். அவர்கள் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இது தவிர கண்டாலாவை சேர்ந்த ரோஹித் என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார். மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இது தவிர 12 பேர் காயம் அடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் கூறுகையில், ''லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதிக்கொண்டது. அதன் தாக்கம் கடுமையாக இருந்தது. இதில் கார் சாண்ட்விட்ச் போன்று இரு லாரிகளிடையே சிக்கிக்கொண்டு தீப்பிடித்துக்கொண்டது.
விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ.சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து நடந்த வாகனத்தில் இருந்து உடல்களை அப்புறப்படுத்த இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டது. இச்சம்பவத்தால் சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் வேறு வழியாக திருப்பிவிடப்பட்டது''என்றார்.
விபத்தை ஏற்படுத்திய டிரைலர் லாரி இரும்பை ஏற்றிக்கொண்டு மும்பை வந்து கொண்டிருந்தது. பும்கர் மேம்பாலத்தில் செல்பி பாயிண்ட் அருகில் வந்தபோது இந்த விபத்து நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். விபத்தில் மினி பஸ் உட்பட 13 வாகனங்கள் சேதம் அடைந்தன.


















