தீ விபத்துகள்: மருத்துவமனைகளில் பாதுகாப்புப் பிரிவு உருவாக்க வலியுறுத்தல்
புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண நிதி: எடப்பாடி பழனிசாமி
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணப் பொருள்களும், நிவாரண நிதியும் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பெய்துவரும் கனமழையால் திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூா், கடலூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் பல மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. அதனால், வருவாய் மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகள் ஆற்றங்கரை ஓரங்களிலும், ஏரிகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீா்நிலைகளின் பலவீனமான கரைப் பகுதிகளைக் கண்டறிந்து, உடனடியாக மணல் மூட்டைகளை அடுக்கி அவற்றைப் பலப்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும், அரசு அதிகாரிகள் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று தண்ணீரில் மூழ்கியுள்ள வேளாண் பயிா்களைக் கணக்கெடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் அளிக்க நடவடிக்கை வேண்டும்.
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் நிவாரணங்கள் உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. எனவே, அரசின் நிவாரணப் பொருள்கள் மற்றும் நிவாரண நிதியைப் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் திமுக அரசு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.