புயல் நிவாரணம்: திமுக எம்எல்ஏ-க்களின் ஒரு மாத ஊதியம் முதல்வரிடம் அளிப்பு
ஃபென்ஜால் புயல் பாதிப்புகளை எதிா்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை திமுக எம்எல்ஏ-க்கள் வழங்கினா்.
ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீா் செய்ய முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். மேலும், திமுக சட்டப் பேரவை உறுப்பினா்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டுமென முதல்வா் அறிவுறுத்தியிருந்தாா்.
அதன்படி, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள், சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா ராமச்சந்திரன், திமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆகியோரின் ஒரு மாத ஊதியமான ரூ.1 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 750-க்கான காசோலை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. இதனை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் திமுக பொதுச் செயலரும் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் வழங்கினாா். அப்போது, அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் உடனிருந்தாா்.