புரட்டாசி மாதப் பிறப்பு: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி, திருநெல்வேலியில் உள்ள பெருமாள் கோயில்களில் புதன்கிழமை ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்துக்கள் இம் மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடுவதைத் தவிா்ப்பதோடு, சனிக்கிழமைகளில் விரதம் இருந்து கருடசேவையில் எழுந்தருளும் பெருமாளை தரிசனம் செய்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.
புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி, திருநெல்வேலியில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களிலும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு கரியமாணிக்க பெருமாள் கோயில், நரசிங்கபெருமாள் கோயில், பாளையங்கோட்டை அழகியமன்னாா் ராஜகோபால சுவாமி கோயில், சி.என்.கிராமத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில், கெட்வெல் ஆஞ்சநேயா் கோயில் வளாகத்தில் உள்ள தன்வந்திரி சுவாமி, மீனாட்சிபுரத்தில் உள்ள நெல்லை திருப்பதி கோயில், வரதராஜபெருமாள் கோயில் ஆகியவற்றில் ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.
திருநெல்வேலி அருகே மேலதிருவேங்கடநாதபுரத்தில் உள்ள தென்திருப்பதியான அருள்மிகு வேங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி மாதப்பிறப்பையொட்டி, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இக் கோயில்களில் இம் மாதம் வரும் சனிக்கிழமைகளில் சிறப்பு கருடசேவை, சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

