Mahindra BE 6e & XEV 9e eSUV: Complete Walkaround and Features Explained in தமிழ...
புற்றுநோய் சிகிச்சை பற்றி.. ரூ.850 கோடி கேட்டு நவ்ஜோத் சிங் சித்து மனைவிக்கு நோட்டீஸ் வந்தது ஏன்?
காங்கிரஸ் கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌர் சித்துவுக்கு சத்தீஸ்கர் சிவில் சொசைட்டியிலிருந்து ரூ.850 கோடி கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய மருத்துவ முறையில் புற்றுநோய் சிகிச்சை நல்ல பலனை அளிப்பதாக நவ்ஜோத் சிங் சித்து வெளியிட்ட விடியோவைத் தொடர்ந்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இதுபோன்ற தகவல்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும், அலோபதி மருத்துவம் மீது எதிர்மறையான சிந்தனையை உருவாக்கிவிடும். புற்றுநோயாளிகள் உடனடியாக சிகிச்சையைத் தொடராமல் இதுபோன்ற பாரம்பரிய முறைகளில் காலத்தை செலவிட்டுவிட்டு முற்றிய நிலையில் ஆபத்தாக மாறிய பிறகு மருத்துவமனைக்கு வர நேரிடும் என்று தெரிவித்துள்ளனர்.
இன்னும் ஒரு வார காலத்துக்குள், நவ்ஜோத் கௌர் தான் கூறிய கூற்றுக்கு சரியான ஆதாரங்களை காட்டத் தவறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
தனது கணவரின் நிலைப்பாடு குறித்து தனது தரப்பு விளக்கத்தையும் அவர் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 21ஆம் தேதி, செய்தியாளர்களிடம் பேசிய நவ்ஜோத் சித்து, மருத்துவர்கள் வெறும் 40 நாள்கள்தான் உயிரோடு இருப்பார் என்று கூறிய நிலையிலும் சில பாரம்பரிய முறையில் அதாவது எலுமிச்சை, மஞ்சள் போன்ற சிகிச்சை எடுத்து புற்றுநோயிலிருந்து மெல்ல விடுபட்டு நல்லப் பலனை அடைந்து வருவதாகக் கூறியிருந்தார்.
புற்றுநோய் குறித்துப் படித்துப் பார்த்தபிறகு சர்க்கரை, மைதா, குளிர்பானங்கள், சமோசா, ஜிலேபி போன்றவற்றை நிறுத்திவிட்டதாகவும் சித்து கூறியிருந்தார்.
கார்போஹைட்ரேட்ஸ், சர்க்கரை போன்றவற்றை உடலுக்குள் செல்லவில்லை என்றால், தானாகவே புற்றுநோய் செல்கள் இறந்துவிடும் என்றும் அவர் கூறியிருந்தது பேசுபொருளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பேச்சு, மருத்துவத் துறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.