செய்திகள் :

`புலிகேசி ஒற்றர் படை’ முதல் `தள்ளிப்போகும் தி.மு.க பொதுக்குழு’ வரை... இந்த வார கழுகார் அப்டேட்ஸ்!

post image

சீமை மாவட்ட மீசை மாண்புமிகுவின்மீது, ஏக கடுப்பில் இருக்கிறார்கள் மாவட்ட உடன்பிறப்புகள். தன் துறையிலிருந்த காலிப் பணியிடங்களுக்கான வாய்ப்பை, தன் சமூக உறவுகளுக்கே வாரி வழங்கியிருக்கிறாராம் மாண்புமிகு. அதேபோல, கட்சி நியமனங்களிலும் தனது உறவுகளையே தொடர்ச்சியாக நியமித்து வருகிறாராம். சமீபத்தில், முதன்மையானவரின் ‘மருந்து’ திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. அதற்கும், தன் சமூக ஆட்களையே நியமிக்கக் காய்நகர்த்துகிறாராம் மாண்புமிகு. இதில் கடுப்பான மாவட்ட உடன்பிறப்புகள், பதவி, கான்ட்ரக்டெல்லாம் சொந்தச் சமூக ஆட்களுக்குத்தான் என்றால், நாங்களெல்லாம் போஸ்டர் ஒட்ட மட்டும்தானா..?' என்று மீசை மாண்புமிகுவிடன் நேரடியாகவே கேட்டுவிட்டார்களாம். இந்த விவகாரம் விரைவிலேயே ‘பெரிய’ அளவில் வெடிக்கும் என்கிறார்கள்!

'ஜில்' மாவட்டத்தின் நுழைவுவாயில் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த இலைக்கட்சி மாவட்டப் புள்ளி, மீண்டும் அதே தொகுதியில் வெற்றிவாகை சூடிவிட பிளான் போட்டு வேலையை ஆரம்பித்திருக்கிறாராம். சமீபத்தில், மறைந்த தலைவரின் பிறந்தநாள் விழாவைத் தன் தொகுதியில் பிரமாண்டமாக நடத்தியிருக்கிறார். விழா ஏற்பாடுகள் தடபுடல்தான் என்றாலும், அவர்மீதிருக்கும் அதிருப்தியில், பல நிர்வாகிகள் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார்களாம். 'அந்தத் தொகுதியில் வெற்றிபெற வேண்டுமென்றால், அவர் அங்கேயே இருந்து வேலை பார்க்கட்டும். அதற்காக, தலைவரின் விழாவை வம்படியாக அங்கு நடத்துவாரா..? மாவட்டத் தலைநகரில் நடத்தியிருந்தால், எல்லோருக்குமே வசதியாக இருந்திருக்குமல்லவா..?' எனக் கடுப்பான மாவட்ட இலைக்கட்சி சீனியர்கள், இது குறித்து தலைமைக்கும் புகார்களைத் தட்டிவிட்டிருக்கிறார்களாம் !

மஞ்சள் மாவட்டத்தில், இலைக் கட்சியிலிருந்து சூரியக் கட்சிக்குத் தாவிய 'கார்டன்' பிரமுகருக்கு, பெரும் பொறுப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதற்கு, மஞ்சள் மாவட்ட முத்தான மாண்புமிகுதான் முக்கிய காரணம். இந்த நிலையில், அந்த மாவட்டத்தில் நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சிக்கு அங்கு வந்த 'ஷாக்' மாண்புமிகுவுடன், மிக நெருக்கமாக நிழல்போல வலம்வந்தாராம் 'கார்டன்' பிரமுகர். விஷயம் தெரிந்து அதிர்ச்சியான முத்தான மாண்புமிகு, 'அவருக்குச் சிபாரிசு செய்து பதவியை வாங்கிக்கொடுத்தது நான். ஆனால், விசுவாசத்தை அவர் எங்கு காட்டுகிறார் பார்த்தீர்களா... அவரை இனி தட்டிவைத்தால்தான் சரிப்படும்' என தன் ஆதரவாளர்களிடம் கடுகடுத்திருக்கிறார். இந்நிலையில், 'இலைக் கட்சியிலிருந்து வந்த அந்த மூன்று பேரால், நம் மாவட்டம் மொத்தமாகச் சீரழியுது' என்று தலைமைக்குப் புகார் தட்டியிருக்கிறார்கள் மஞ்சள் மாவட்ட உடன்பிறப்புகள்!

கடந்த டிசம்பர் மாதமே நடப்பதாக இருந்த தி.மு.க பொதுக்குழு, பல்வேறு காரணங்களால் தள்ளிபோய்க்கொண்டே இருக்கிறது. வரும் மார்ச் மாத முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அதுவும் பட்ஜெட் கூட்டத்தொடரால் தள்ளிப்போகிறதாம். 'மார்ச் இறுதியில் முதல்வரின் வெளிமாவட்டப் பயணம் இருப்பதால், அப்போதும் பொதுக்குழு நடத்த முடியாது. இதற்கிடையே, மாவட்டக் கழகங்களில் சில மாற்றங்களைச் செய்துமுடிக்கவும் தலைமை திட்டமிட்டிருக்கிறதாம். அதற்குக் காலதாமதம் ஏற்பட்டால், ஏப்ரல் மாதம்தான் பொதுக்குழு நடக்க வாய்ப்பிருக்கிறது' என்கிறார்கள் அறிவாலய சீனியர்கள். பொதுக்குழுவைத் தாமதமாக நடத்திக்கொள்வது குறித்து, தேர்தல் ஆணையத்திடம் தெரியப்படுத்தியிருக்கிறார்களாம்!

மலர்க் கட்சியிலிருக்கும் பிரபல ரௌடி ஒருவர், தென்சென்னையிலுள்ள மாலுக்கு, தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்று பிறந்தநாள் கேக் வெட்டி பிரமாண்டமாகக் கொண்டாடியிருக்கிறார். அதற்காக, அந்த ஏரியா முழுவதும் போஸ்டர்களை ஒட்டி அதகளப்படுத்திவிட்டார்கள் அவரின் அடிப்பொடிகள். ஆனால், இந்தத் தகவல் ஏரியா உளவுப்பிரிவு அதிகாரிகளுக்குத் தெரியாததுதான் உட்சபட்ச காமெடி. இதில், டென்ஷனான தலைநகர் உளவுப்பிரிவு உயரதிகாரி, ஏரியா அதிகாரிகளை அழைத்து லெப்ட் அன்ட் ரைட் வாங்கியிருக்கிறார். 'புலிகேசி படத்தின் ஒற்றர்படை போலச் செயல்பட்டால் எப்படி..?' எனக் கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டாராம். பதில் சொல்ல முடியாமல் நெளிந்து வெளியேறியிருக்கிறார்கள் ஏரியா உளவுப்பிரிவு காக்கிகள்!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Annamalai: "நீங்களே பொய் சொல்லலாமா?" - மும்மொழி கொள்கை விவகாரத்தில் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் விஜய், ஆதவ் அர்ஜுனா மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த... மேலும் பார்க்க

'அடுத்தடுத்து ஒப்பந்தங்கள்' ட்ரம்பை இழுக்க முயலும் ரஷ்யா, உக்ரைன் - போர் முடிவுக்கு வருமா?

கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது ரஷ்யா - உக்ரைன் போர். 'இந்தப் போர் முடிய வேண்டும்' என்று உலக நாடுகள் அனைத்தும் விரும்ப, 'நான் அதிபரானால் இந்தப் போரை நிறுத்த அனைத்து விதமான முயற்சிகளையும் செய... மேலும் பார்க்க