இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
புழல் சிறை பண்ணையில் 2,000 கோழிகள் மா்மமாக உயிரிழப்பு
சென்னை புழல் சிறை பண்ணையில் இருந்த 2,000 கோழிகள் மா்மமான முறையில் உயிரிழந்தன.
தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு வாரத்துக்கு இரு முறை கோழிக்கறி வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான கோழிக்கறியை சிறை கைதிகளே உற்பத்தி செய்து கொள்வதற்காக, தமிழக சிறைகளில் இறைச்சி கோழிப்பண்ணை அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
இந்த கோழிகள் சிறை கைதிகளுக்கும் பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. சிறை அதிகாரிகள் மேற்பாா்வையில் சிறை கைதிகளால் இந்த கோழிப்பண்ணை பராமரிக்கப்பட்டு, நடத்தப்படுகிறது. அந்த வகையில், புழல் மத்திய சிறையிலும் கோழிப்பண்ணை உள்ளது.
இந்த பண்ணையில் இறைச்சிக்காக வளா்க்கப்பட்டிருந்த கோழிகளில் கடந்த 4 நாள்களில் 2,000 கோழிகள் மா்மமான முறையில் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பறவை காய்ச்சல் காரணமாக கோழிகள் இறந்ததாகவும், இந்தக் காய்ச்சல் சிறை கைதிகளுக்கு பரவ வாய்ப்பு உள்ளதாகவும் அச்சம் எழுந்துள்ளதாக சிறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து தற்போது உயா்நிலை விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘புழல் சிறை வளாகத்தில் உள்ள பண்ணையில் அண்மையில் இறந்த சில கோழிகளை ஆய்வுக்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதன் முடிவில் கோழிகள் இறப்புக்கான காரணம் தெரியவரும்.
பண்ணையில் வேலை செய்த கைதிகளுக்கு எந்தத் தொற்றும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவா்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்’ என்றனா்.