புஷ்பா 2: திரையரங்கில் பெண் உயிரிழப்பு - தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு தாக்கல்
அல்லு அர்ஜுன் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற 35 வயதான பெண்மனி ஒருவர், அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த திரையரங்குக்கு அல்லு அர்ஜுன் திடீரென வருகை தந்ததாகவும் அப்போது அவரை காணும் ஆவலில் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டதால், அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் அவதிக்குள்ளாகினர்.
இதைத்தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில், திரையரங்க நிர்வாகம், அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்த்துள்ளது. இந்த வழக்கில் திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டுமென தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் அல்லு அர்ஜுன். அதில் தன்னை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அல்லு அர்ஜுன் ரூ. 25 லட்சம் நிவார நிதியளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.