புவனேசுவரத்தில் நவ.29-டிச. 1 வரை டிஜிபிக்கள் மாநாடு: பிரதமா் மோடி, உள்துறை அமைச்...
பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு; நவ.,13-ல் தீர்ப்பு... ஓபிஎஸ் சகோதரர் ஆஜராக உத்தரவு!
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகமுத்து (22). இவர் கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக இருந்தார். கோயிலில் கடை ஒதுக்குவது தொடர்பான விவகாரத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நாகமுத்துவுக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியும் பெரியகுளம் நகர் மன்றத் தலைவருமான ஓ.ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. இதில் நாகமுத்து தாக்கப்பட்டார்.
இந்நிலையில் 2012 டிசம்பர் 7-ம் தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக கோயில் அறங்காவலராகவும், பெரியகுளம் முன்னாள் நகர சபை தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உட்பட 7 பேர் மீது தென்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுப்படி 2015 டிசம்பர் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே பாண்டி இறந்துவிட்டார். மீதமுள்ள 6 பேர் மீதான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஓ.ராஜா, மணிமாறன், சிவகுமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர் நிபந்தனையற்ற ஜாமீன் பெற்று இருப்பதால், வழக்கு விசாரணையின் போது திண்டுக்கல் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.
இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 4 சாட்சியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அரசு தரப்பின் இறுதி கட்ட வாதத்திற்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ஓ.ராஜா ஆஜராகவில்லை. அரசு தரப்பில் இறுதிகட்ட விளக்க உரையானது நடைபெற்று முடிவடைந்தது.
இதனையடுத்து நீதிபதி, வழக்கின் தீர்ப்பை நவம்பர் 13-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஓ.ராஜா உட்பட 6 நபர்களும், அரசு மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.