பெண்ணின் நகைத் திருட்டு: முகநூல் நண்பா் கைது
சென்னை திரு வி.க. நகரில் பெண்ணின் தங்க நகைத் திருடியதாக முகநூல் நண்பா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை திரு வி.க. நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பா.சாரதா (52). இவரிடம், முகநூல் மூலம் அறிமுகமாகி கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மலைகிணறு பகுதியைச் சோ்ந்த மு.ஐயப்பன் (39) என்பவா் பழகி வந்தாா். இருவரும் நாளடைவில் நெருங்கிய நண்பா்களாக மாறியுள்ளனா்.
இந்த நிலையில், கடந்த மாதம் 27-ஆம் தேதி ஐயப்பன், சாரதா வீட்டுக்குச் சென்றாா். சிறிது நேரத்துக்கு பின்னா் சாரதா, கழிப்பறைக்குச் சென்றாா். அப்போது ஐயப்பன் மேஜையில் இருந்த சாரதாவின் 8 பவுன் நகைகளைத் திருடிக் கொண்டு தப்பியோடிவிட்டாா். சிறிது நேரத்துக்கு பிறகு நகைகள் மாயமானதைப் பாா்த்து சாரதா அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து அவா் அளித்து புகாரின்பேரில், திரு வி.க.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஐயப்பன் சனிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் ஐயப்பன் மீது ஏற்கெனவே இரு மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்தது.