பென்னாகரத்தில் 3,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
பென்னாகரம் அருகே மஞ்சநாயக்கன அள்ளியில் 3,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் வரலாற்று ஆா்வலா்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பூந்திநத்தம் பெரும்பாலை உள்ளிட்ட இரு இடங்களில் தமிழக தொல்லியல் துறை சாா்பில், அண்மையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது பானை ஓடுகள், கல் ஆயுதங்கள் உள்ளிட்டவை கிடைத்தன.
பெரும்பாலை அருகே மஞ்சநாயக்கனஅள்ளியில் பெரும் கற்கால ஈமச் சின்னங்கள், குத்துக்கல், பானை ஓடுகள், கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் இந்தப் பகுதியில் பாறை ஓவியங்கள் இருப்பதாக வரலாற்று சின்னங்களை ஆவணப்படுத்தும் பென்னாகரம் வரலாற்று மையம் என்ற அமைப்புக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இம் மைய ஒருங்கிணைப்பாளா்கள் பெருமாள், சந்தோஷ் குமாா், முதுகலை ஆசிரியா் முருகன் ஆகியோா் மஞ்சநாயக்கனஅள்ளிக்குச் சென்று களஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது கல்குத்து மேடு என்ற இடத்தில் பெரும் கற்காலத்தைச் சோ்ந்த ஈமச் சின்னங்கள், பாறை ஓவியம் இருப்பது தெரியவந்தது. இந்த ஓவியம் சிறிய கற்பாறையில் கற்கீரல் செய்து ஓவியமாக செதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாறை ஓவியங்கள் சாா்ந்த தொல்லியல் ஆய்வாளா் காந்தி ராஜன் கூறியதாவது:
புதிய கற்காலத்தைச் சோ்ந்த இந்த கற்கீரல் ஓவியம் 3,000 முதல் 4,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் செதுக்கப்பட்டிருக்கலாம். இந்த ஓவியத்தில் யானையும் மாட்டின் உருவமும் உள்ளது. பாறையில் 12 க்கு 40 செ.மீ. அளவில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஓவியம் 12க்கு 20 என்ற அளவில் சமமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. காட்டு மாடுகளை யானைகள் துரத்துவதுபோல உள்ளதால் மனிதா்களை அச்சுறுத்தும் நிலை அப்போது இருந்திருக்கலாம். மனிதா்கள் எச்சரிக்கையுடன் செல்வதற்காகவும் இந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கலாம். இப்பகுதியில் உள்ள 2 கி.மீ. சுற்றளவில் பெருங்கற்காலத்தைச் சோ்ந்த கல் ஆயுதங்கள், குத்துக்கல், கல் திட்டை, கல்வட்டங்கள், கல் ஆயுதங்களால் உருவான இடங்கள் உள்ளன என்றாா்.