பெரம்பலூா் மாவட்டத்தில் 18 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
பெரம்பலூா் மாவட்டத்தில் 18 இடங்களில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம், பெரம்பலூா் வட்டாரத்தில் குரும்பலூா், வேப்பந்தட்டை வட்டாரத்தில் அரும்பாவூா், இனாம் அகரம், அன்னமங்கலம், தொண்டமாந்துறை மற்றும் பூலாம்பாடி, குன்னம் வட்டாரத்தில் அகரம் சீகூா், கோவில்பாளையம், வசிஷ்டபுரம், நன்னை மற்றும் காடூா் ஆகிய 11 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக, விவசாயிகளிடமிருந்து இதுவரை 2,168 மெட்ரிக். டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கூடுதலாக கடந்த 25-ஆம் தேதி முதல் குன்னம் வட்டாரத்தில் வடக்கலூா், துங்கபுரம், ஒகளூா், அத்தியூா் மற்றும் எழுமூா், வேப்பந்தட்டை வட்டாரத்தில், கை.களத்தூா், வெங்கலம் ஆகிய 7 இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சன்னரகம் நெல் குவிண்டால் ஒன்று ரூ. 2,450, பொது ரகம் குவிண்டால் ஒன்று ரூ. 2405 எனும் விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. எனவே, நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம்.