'தகுதிச்சான்றிதழ் பெற ரூ.20 லட்சம் லஞ்சம்' - பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் சஸ்...
பெருங்குடலை அலசி நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கலாமா?
வயிற்றைச் சுத்தப்படுத்த உண்ணாநோன்பு இருப்பதும், மூலிகைக் கஷாயம் குடிப்பதும், விளக்கெண்ணெய் குடிப்பதும் அல்லது எனிமா எடுத்துக்கொள்வதும் காலங்காலமாகக் கடைப்பிடித்து வந்த பழக்கங்கள். இதனால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள், நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் இன்றோ வீட்டை சுத்தம் செய்யக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம்.
வயிற்றை சுத்தம் செய்வது என்றால் என்ன, எப்படி செய்யப்படுகிறது என வயிறு மற்றும் செரிமான மண்டல சிகிச்சை நிபுணர் பாசுமணியிடம் விரிவாகக் கேட்டோம்.

’’வாயில் தொடங்கி ஆசனவாய் வரை உள்ள நம் செரிமான மண்டலத்தின் கடைசி பகுதி பெருங்குடல். இந்த பெருங்குடல் சுமார் ஐந்து அடி நீளமும், இரண்டரை இன்ச் சுற்றளவும் கொண்டது.
இதன் முக்கிய பணி, உணவு செரிமானத்துக்குப் பிறகு ஏற்படும் கழிவுகளை வெளியேற்றுவதும், நீர் இழப்பைத் தவிர்ப்பதும்தான். பெருங்குடலில் நன்மை தரும் பாக்டீரியா வசிக்கிறது.
இந்த பாக்டீரியா வைட்டமின் கே மற்றும் பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் உற்பத்திக்கு உதவியாக இருக்கிறது.
கழிவுகளை வெளியேற்றும் போது சில நேரங்களில் பெருங்குடலிலேயே கழிவுகள் தங்கிவிடலாம். அது நாம் சாப்பிட்ட உணவின் எச்சம், இறந்த செல் திசு, வயிற்றில் சுரக்கும் சளி போன்ற திரவம், ஒட்டுண்ணியாகவும் இருக்கலாம்.
இப்படி தங்கும் கழிவுகளால் நமக்குப் பிரச்னைதான். கழிவுகள் என்றாலே விஷம்தான். இப்படி தங்கிவிட்ட நஞ்சு மீண்டும் ரத்தத்தில் கலந்து, நல்ல பாக்டீரியாவைப் பாதித்து ஊட்டச்சத்து உற்பத்தியைத் தடுத்துவிடும்.
மேலும், செரிமான மண்டலத்தின் செயல்திறனையே பாதித்து, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒருவருக்கு இப்படி கழிவு தங்கினால், தலைவலி, முதுகுவலி, மலச்சிக்கல், சோர்வு, வாயில் கெட்ட வாசனை, உடலில் துர்நாற்றம், எரிச்சல், குழப்பமான மனநிலை, தோல் பிரச்சனைகள், வாயுத் தொல்லை, வயிற்றுப்போக்கு, இடுப்புவலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

இதைக் சுத்தம் செய்யும் சிகிச்சை முறைக்குத்தான் ‘கலோனிக் லாவேஜ்’. அதாவது, பெருங்குடலை நீரால் அலசி சுத்தப்படுத்தும் நீர் சிகிச்சை.
ஒரு மணி நேரத்தில் பெருங்குடல் சுத்தப்படுத்தும் சிகிச்சை முடிந்துவிடும். இதற்காக தோராயமாக 18–20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட நீர் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சிகிச்சையின் போது, சிகிச்சை எடுத்துக்கொள்பவரின் வயிற்றில் மென்மையாக மசாஜ் செய்யப்படும். அதன் பிறகு, அவரது ஆசனவாய் வழியே குடலைச் சுத்தப்படுத்தும் பிரத்யேக கருவி பெருங்குடல் வரை உள்ளே செலுத்தப்படும்.
இந்த கருவியின் ஒரு குழாய் சுத்தமான நீரை உள்ளே பாய்ச்சும்; அந்த நீர் குடலைச் சுத்தப்படுத்தும். மற்றொரு குழாய், குடலைச் சுத்தப்படுத்திய நீரை உறிஞ்சி வெளியே எடுக்கும்.
இப்படி பெருங்குடல் முதல் மலக்குடல் வரை உள்ள குடல் பகுதிகள் கழுவி சுத்தம் செய்யப்படும். ஆசனவாய் வழியே செலுத்தப்படுகிறதே என்ற அசௌகரியத்தைத் தவிர்த்து, வலி ஏதும் இருக்காது.
இந்த சிகிச்சையின் போது, வயிற்றில் உள்ள கழிவுகளுடன் நன்மை செய்யும் பாக்டீரியாவும் வெளியேறும். ஆனால் பாக்டீரியா முற்றிலும் வெளியேற்றப்படுவது இல்லை.
குடலைச் சுத்தம் செய்து, நன்மை செய்யும் பாக்டீரியா வாழ ஏற்ற சூழல் ஏற்படுத்தித் தரப்படுவதால், அவை சில நாட்களிலேயே நன்றாக பெருக்கம் அடைந்துவிடும்.
சிலர், “எதற்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும், எனிமா கொடுத்தாலே வயிறு சுத்தமாகிவிடுமே” என்று நினைக்கலாம். எனிமா என்பது மலக்குடலை மட்டுமே சுத்தம் செய்யும். அதனால் பெருங்குடலைச் சுத்தப்படுத்த முடியாது.
பொதுவாக கேஸ்ட்ரோஎன்ட்ராலஜி மருத்துவர்கள் இதைப் பரிந்துரை செய்வது இல்லை. ஆனால், நோயாளி விரும்பினால், அவருக்கு இதைச் செய்வதால் பாதிப்பு இல்லை என்ற நிலையில் நீர் சிகிச்சை செய்யப்படுகிறது,” என்றார்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இதற்கென வயிறு செரிமான மண்டல நிபுணர்கள் அல்லது பயிற்சி பெற்ற செவிலியர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
இந்தியாவில் 'இந்த சிகிச்சை புதிது’ என்பதால் ஒரு சில மருத்துவர்கள்தான் சிகிச்சை அளிக்கின்றனர். நன்கு பயிற்சிபெற்ற நிபுணரிடம் மட்டுமே இதைச் செய்ய வேண்டும். இல்லை எனில், பிரத்யேகக் கருவியை உள்ளே செலுத்தும்போதும், நீரைப் பீய்ச்சி அடிக்கும்போதும் குடலில் காயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு'' என்கிறார் டாக்டர் பாசுமணி.

















