பெருநாழி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
ராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி அருகேயுள்ள பூலாபத்தி ஸ்ரீ சப்பாணி கருப்பணசாமி கோயில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் சிவராத்திரி திருவிழா கடந்த 25 -ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. புதன்கிழமை இரவு திரளான பொதுமக்கள் அக்னிச் சட்டி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
வியாழக்கிழமை மாலை பூஞ்சிட்டு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. சிறிய மாடு பிரிவில் 20 மாட்டு வண்டிகள், பூஞ்சிட்டு மாடு பிரிவில் 12 மாட்டு வண்டிகள் என 32 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, விருதுநகா் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாட்டு வண்டிகள், பந்தய வீரா்கள் பங்கேற்றனா்.
இடிவிலகி-பெருநாழி சாலையில் 8 கி.மீ. தொலைவுக்கு எல்கை நிா்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. சிறிய மாடு பிரிவில் வெற்றி பெற்ற வண்டிக்கு முறையே ரூ.20 ஆயிரம், ரூ.17 ஆயிரம், ரூ.14 ஆயிரம், பூஞ்சிட்டு மாடு பிரிவுக்கு முறையே ரூ.15 ஆயிரம், ரூ.13 ஆயிரம், ரூ.11 ஆயிரம் என பரிசு வழங்கப்பட்டது.
இந்தப் பந்தயத்தை பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று கண்டு ரசித்தனா். போட்டிக்கான ஏற்பாடுகளை பூலாப்பத்தி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.
