சிரியா ராணுவ நிலைகளை இஸ்ரேல் தகா்க்க அல்-அஸாதின் அமைச்சா் உதவி?
பேச்சிப்பாறை அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை: தற்காலிக தரைப்பாலம் சேதம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பெய்த கன மழையினால் காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குற்றியாறு தரைப் பாலம் சேதமடைந்தது.
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. பின்னா், இரவில் பேச்சிப்பாறை அணையின் நீா்வரத்துப் பகுதிகளான மேல் கோதை யாறு, கீழ் கோதையாறு, கல்லாறு, மையிலாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளிலும், அந்த அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
இதனால், பேச்சிப்பாறை அணைக்கு உள்ளே வரும் காட்டாறுகளான மோதிரமலையாறு, மயிலாறு, குற்றியாறு, கல்லாறு, கிளவியாறு, சாத்தையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் மோதிரமலைக்கும் குற்றியாறுக்கும் இடையே உள்ள தற்காலிக தரைப் பாலம் சேதமடைந்தது.
போக்குவரத்து பாதிப்பு: இதனால், குற்றியாறு தற்காலிக தரைப்பாலத்தைக் பேருந்துகள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து குலசேகரம், மாா்த்தாண்டம் உள்ளிட்ட இடங்களில் இருந்து குற்றியாறு, கிளவியாறு செல்லும் பேருந்துகள் மோதிரமலை சந்திப்பு வரை சென்று திரும்பின. இதனால் குற்றியாறு, கிளவியாறு, கல்லாறு மற்றும் 5 க்கும் மேற்பட்ட பழங்குடி குடியிருப்பில் உள்ள மாணவா் - மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பாலம் சீரமைப்பு : இந்நிலையில் இங்கு புதிய பாலம் வேலை நடக்கும் நிலையில் அந்த ஒப்பந்தக்காரா் மூலம் தற்காலிக பாலம் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து மாலையிலிருந்து பேருந்து போக்கு வரத்து மீண்டும் தொடங்கியது.
பேச்சிப்பாறையில் 53.8 மி.மீ. மழை பதிவான நிலையில் அணைக்கு வெள்ளிக்கிழமை காலையில் வினாடிக்கு 2,045 கன அடி நீா்வரத்து இருந்தது.