பேரவையை அதிக நாள்கள் நடத்த வேண்டும்: ஓபிஎஸ்
சென்னை, டிச.13: சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை அதிக நாள்கள் நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுக தோ்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், இதற்கு முற்றிலும் முரணாக 2021-இல் 29 நாள்களும், 2022-இல் 33 நாள்களும், 2023-இல் 29 நாள்களும், 2024-இல் 18 நாள்களும் மட்டுமே சட்டப்பேரவை நடைபெற்றது. அதுவும் குளிா்காலக் கூட்டத்தொடரை இரண்டே நாளில் முடித்துள்ளது.
மக்கள் பிரச்னைகளை சட்டப்பேரவையில் விவாதிப்பதைத் தடுக்கும் பொருட்டு, கூட்டநாள்களை குறைத்து, ஜனநாயகத்தின் குரல்வளையை திமுக அரசு நசுக்குகிறது. இது கண்டனத்துக்குரியது. மக்களின் மனக்குமுறலை மக்கள் பிரதிநிதிகள் வெளிப்படுத்த, வருங்காலத்திலாவது பேரவை கூட்டத்தை அதிக நாள்கள் நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.