போராட்டத்தில் ஈடுபட்டால் மட்டுமே முறையான விசாரணை? சிபிஐ மீது விமர்சனம்
பேரிடர் காலங்களில் அரசியல் பாகுபாடு காட்டக்கூடாது: பிரியங்கா
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டு மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டக்கூடாது என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.
வயநாடு மக்களுக்கு நிவாரண நிதி உதவியை விரைவாக வழங்கக் கோரி பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளத்தின் வயநாடு மாவட்டத்துக்கு விரைவாக நிதியுதவி வழங்க வலியுறுத்தி வயநாடு தொகுதியின் எம்பியும், கேரள எம்பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வயநாட்டுக்கு நீதி வேண்டும் என்றும் வயநாட்டுக்கு நிவாரண நிதி வழங்குங்கள் என்றும் கோஷங்களை எழுப்பினர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா..
வயநாட்டுக்கு சிறப்பு நிதி உதவியை வழங்க அரசு மறுப்பதால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். உள்துறை அமைச்சரிடம் இதுதொடர்பாக முறையிட்டோம். பிரதமருக்கும் சாத்தியமான அனைவரும் கடிதம் எழுதியுள்ளோம். இது ஒரு கடுமையான இயற்கை பேரிடராக அறிவிக்கவும், சிறப்பு தொகுப்பு வழங்கவும் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் ஹிமாசலத்தில் இதேபோன்று பெரிய அளவிலான அழிவுகள் நடந்துள்ளன. அங்கும் மத்திய அரசு உதவி வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாகக் கூறி வருகின்றனர்.
வயநாட்டில் மக்களின் அழிவு, வலி மற்றும் துன்பத்தைப் பார்த்தபோதிலும் அரசியல் காரணமாக மத்திய அரசு இரண்டு நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவேண்டியதை வழங்க மறுக்கிறது.
“அவர்கள் இந்தியக் குடிமக்கள். இயற்கை சீற்றங்கள், வலிகள், துன்பங்கள் என எந்த வகையிலும் பாகுபாடு காட்டக்கூடாது. மத்திய அரசும் பிரதமரும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் பாதுகாவலர்களாக இருக்கவேண்டிய நேரம் இது.. இதில் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.
வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டியதை மனிதாபிமானம் மற்றும் கருணையுடன் அரசு வழங்கவேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் ஏமாற்றமடைந்துள்ளோம். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்பதால், அரசு இரக்கமும் மனிதாபிமானமும் கொண்டிருக்கும், செய்ய வேண்டியதைச் செய்யும் என்று எம்.பி.க்கள் இன்னும் நம்புகிறார்கள் என்று அவர் கூறினார்.
கடந்த ஜூலையில் கேரளத்தை உலுக்கிய பேரழிவு, புஞ்சிரிமட்டம், சூரல்மலா மற்றும் முண்டக்கை ஆகிய மூன்று கிராமங்களின் பெரும் பகுதிகளையும், வயநாட்டில் உள்ள அட்டமலா பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பேரழிவு 231 உயிர்களைப் பலி வாங்கியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வயநாடு மக்கள் தங்கள் வாழ்க்கையைக் கண்ணியத்துடன் மீண்டும் கட்டியெழுப்ப அவசர உதவி தேவை என்று அவர் வலியுறுத்தினார்.