மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
பேருந்தில் பயணி தவறவிட்ட பணத்தை போலீஸில் ஒப்படைத்த காவலாளி
சேரன்மகாதேவியில் பேருந்தில் பயணி தவறவிட்ட பணம், கைப்பேசியை அரசுப் போக்குவரத்துக் கழக காவலாளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
அம்பாசமுத்திரம் அருகேயுள்ள இடைகால் பாப்பான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (44). இவா், ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவா், சேரன்மகாதேவி கூனியூரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் காவலாளியாக பணி செய்து வருகிறாா்.
செவ்வாய்க்கிழமை இரவில் பணியில் இருந்த முருகேசன், வழக்கம்போல் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் சோதனையிட்டாா். அப்போது, ஒரு பேருந்து இருக்கையின் கீழே கிடந்த கைப்பையில் ரூ. 60 ஆயிரம், கைப்பேசி, வங்கி புத்தகம் ஆகியவை இருந்தன.
இதையடுத்து, பணிமனை மேலாளருடன் சேரன்மகாதேவி காவல் நிலையத்துக்கு புதன்கிழமை சென்று கைப்பையை ஒப்படைத்தாா்.
இதுகுறித்து காவல் ஆய்வாளா் தா்மராஜ் விசாரணை நடத்தியதில், அந்த கைப்பை சுத்தமல்லி பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் மாடசாமி (77) என்பவருக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. இதையடுத்து மாடசாமியை வரவழைத்து கைப்பையை அவரிடம் ஒப்படைத்தனா்.
நோ்மையாக செயல்பட்ட காவலாளி முருகேசனுக்கு காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா், போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா். கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 6ஆம் தேதி முருகேசன், இதேபோல் பேருந்து ஒன்றில் இருந்து கண்டெடுத்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் தங்க நகைகளை போலீஸில் ஒப்படைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.