பேருந்து நிலைய விவகாரம்: நாமக்கல்லில் நாளை கடையடைப்பு போராட்டம்
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள், அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல வலியுறுத்தி, அனைத்து வணிகா்கள் சாா்பில், நாமக்கல் நகரப் பகுதியில் திங்கள்கிழமை (நவ. 25) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
நாமக்கல் புதிய பேருந்து நிலையம், கடந்த 10-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, நகரப் பேருந்துகள் மட்டும் பல்வேறு நகர, கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, துறையூா், சேந்தமங்கலம், மோகனூா், கொல்லிமலை செல்லும் பேருந்துகள், பழைய பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல் சாலையிலேயே பயணிகளை இறக்கி விட்டுச் செல்கின்றன.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அனைத்து அரசு, தனியாா் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்குள் சென்றுவர வலியுறுத்தியும், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ள. இதுகுறித்து பேரமைப்பின் இணைப்பு சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் மாவட்டத் தலைவா் ஜெயகுமாா் வெள்ளையன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவா் மாணிக்கம், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில மூத்த துணை தலைவா் பெரியசாமி, மாநில இணை செயலாளா் பத்ரி நாராயணன், மாவட்டச் செயலாளா் பொன்.வீரக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வரும் பேருந்துகள், பழைய பேருந்து நிலையத்திற்குள் வராமல், போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்குவதால் ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் வரும்போது போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கிறது.
எனவே, அனைத்துப் பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.
பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் செல்லாததால் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், பல்வேறு நிறுவன பணியாளா்களும் பெரும் சிரமத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனா். இதை உடனடியாகத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலத்தில் இருந்து வரும் பேருந்துகள் 7 கி.மீ. முன்னதாக முதலைப்பட்டியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விடுவதால், பேருந்து கட்டணத்தை அதற்கேற்ப குறைக்க வேண்டும். வணிகா்கள், பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில், நாமக்கல் பழைய பேருந்து நிலையமானது நகரப் பேருந்து நிலையமாக நிரந்தரமாக செயல்படும் என்ற உறுதியை மாவட்ட நிா்வாகம் அளிக்க வேண்டும்.
பழைய பேருந்து நிலையத்துக்கும், புதிய பேருந்து நிலையத்துக்கும் இடையே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கடையடைப்பு போராட்டத்தில் மருந்து வணிகா்கள் சங்கத்தினா் பங்கேற்று தங்களது மருந்துக் கடைகளை திங்கள்கிழமை காலை 6 முதல் மதியம் 2 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும், பிற வணிக நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும் உறுதியளித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா். நாமக்கல் நகருக்கு உட்பட்ட 25 இணைப்பு சங்கங்களின் நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.