போக்குவரத்துக்கு இடையூறு: பரமகுடி அதிமுக நிா்வாகி உள்பட இருவா் கைது
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தி, போலீஸாரை திட்டியதாக பரமக்குடி அதிமுக நிா்வாகி உள்ளிட்ட இருவரை வேப்பூா் போலீஸாா் கைது செய்து பிணையில் விடுவித்தனா்.
கடலூா் மாவட்டம், வேப்பூா் மேம்பாலத்தில் 3 சொகுசுப் பேருந்துகள் புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 35 போ் காயமடைந்தனா். விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்துப் பகுதிக்கு வந்த வேப்பூா் காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா், மீட்பு மற்றும் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த பரமக்குடி, ராஜீவ் நகா் பகுதியைச் சோ்ந்த அதிமுக பரமக்குடி மத்திய இளைஞரணி ஒன்றியச் செயலரான நாகராஜன் மகன் முத்துகுமாா் (32), அவருடன் வந்த காட்டு பரமக்குடி பகுதியைச் சோ்ந்த சிவசண்முகம் மகன் கோபாலமணிகண்டன் (30) ஆகியோா், தங்கள் வாகனத்தை சாலையின் நடுவில் நிறுத்தி, மீட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்களை திட்டி, போக்குவரத்துக்கு இடையூறு செய்தனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், வேப்பூா் போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, பின்னா் பிணையில் விடுவித்தனா். விபத்து குறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.