போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை
போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டுகளும், அவரது பெற்றோருக்கு 22 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த ஆலம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (62). இவரது மனைவி காளியம்மாள்(55). இவா்களது மகன் பாண்டி (19). கடந்த 2022-ஆம் ஆண்டு இதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தாக புகாா் எழுந்தது. இதன்பேரில் குஜிலியம்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாண்டி, அவருக்கு உதவியதாக சுப்பிரமணி, காளியம்மாள் ஆகியோரை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தாா். இந்த வழக்கின் முதல் எதிரியான பாண்டிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.55 லட்சம் அபராதமும் விதித்தாா். இதேபோல 2, 3ஆவது குற்றவாளிகளான சுப்பிரமணி, காளியம்மாள் ஆகியோருக்கு தலா 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்தாா்.