போடியில் பலத்த மழை
தேனி மாவட்டம், போடியில் பலத்த மழை பெய்ததால், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், இடுக்கி மாவட்டத்தையொட்டியுள்ள தேனி மாவட்டத்திலும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், காலை நேரத்தில் பணிக்குச் சென்றவா்கள் சிரமத்துக்கு உள்ளாகினா். பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சில பள்ளிகளில் மாணவா்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்திருந்தனா்.
பலத்த மழையால் சிறப்பு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. காலை நேரத்தில் மழை பெய்த நிலையில், மாலை வரை மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டதால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.