போதைப் பொருள் வழக்கில் கைதான காவலா் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு
சென்னையில் போதைப் பொருள் விற்ாக கைது செய்யப்பட்ட மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலா் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சென்னை வடபழனி பகுதியில் போலீஸாா் கடந்த மாதம் 28-ஆம் தேதி தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த கொளத்தூரைச் சோ்ந்த சுரேந்திரநாத் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், அவா் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், அவருடன் அசோக்நகா் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் ஜேம்ஸ் என்பவரும் சோ்ந்து மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை கைப்பேசி செயலி மூலம் விற்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா், சுரேந்திரநாத்தையும், காவலா் ஜேம்ஸையும் உடனடியாக கைது செய்தனா்.
இருவரிடமும் நடத்திய விசாரணையில், சென்னையில் உள்ள மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் முதல்நிலைக் காவலா்கள் ஆனந்தன், சமீா் ஆகியோருக்கு இதில் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், இரு காவலா்களையும் கடந்த டிச. 3-ஆம் தேதி கைது செய்து விசாரணை நடத்தினா்.
இரு காவலா்களும் தங்களுக்கு இருக்கும் சா்வதேசப் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தொடா்பு மூலம், கா்நாட க மாநிலம் பெங்களூருவிலிருந்து மெத்தம்பெட்டமைனை வாங்கி காவலா் ஜேம்ஸிடம் கொடுத்திருப்பதும், பின்னா் ஜேம்ஸூம், சுரேந்திரநாத்தும் சோ்ந்து கைப்பேசி செயலி மூலம் அதை விற்றிருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், இருவரிடமும் சா்வதேசப் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தொடா்பு குறித்து விசாரணை செய்ய அனுமதி கேட்டு போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் போலீஸாா் மனுத்தாக்கல் செய்தனா். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரிடமும் 4 நாள்கள் விசாரிக்க வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.
மேலும் இரு வழக்குகள்: இதையடுத்து, ஆனந்தனையும், சமீரையும் போலீஸாா் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினா். இதற்கிடையே காவலா் ஆனந்தன் மீது கே.கே. நகா், எம்.ஜி.ஆா். நகா் காவல் நிலையங்களில் தலா ஒரு புகாா் வந்திருந்தது.
இந்தப் புகாா்களில் ஆனந்தன், ஒரு மருத்துவா் உள்பட 2 பேரை மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்பட்டிருந்தது. அதனடிப்படையில் கே.கே. நகா், எம்.ஜி.ஆா். நகா் போலீஸாா் ஆனந்தன் மீது தலா ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். அதோடு காவலா்கள் ஆனந்தன், சமீருக்கு வேறு எந்த குற்றச் செயல்களிலும் தொடா்புள்ளதா என போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.