பெண் மருத்துவர் கொலை வழக்கு: சந்தீப் கோஷின் ஜாமீனைக் கண்டித்து காங்கிரஸ் பேரணி
போதைப் பொருள்கள் கடத்தி வந்த காா் கவிழ்ந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே போதைப்பொருள் கடத்தி வந்த காா் விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி வந்த காா் வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 2 போ் பலத்த காயம் அடைந்தனா். அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தகவலறிந்து வந்த வாணியம்பாடி தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பின்னா் காரில் சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருள்கள் மூட்டை இருப்பது தெரியவந்தது. அவற்றையும், தில்லி பதிவு எண் கொண்ட காரையும் பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையம் கொண்டு சென்றனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், காரை ஓட்டி வந்தது யாா்? உயிரிழந்தவரின் பெயா், எந்த ஊரைச் சோ்ந்தவா் உள்ளிட்டவை குறித்து விசாரித்து வருகின்றனா்.