தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
போா் நிறுத்த பேச்சு முடக்கம்: மத்திய காஸாவிலிருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு!
போா் நிறுத்த பேச்சுவாா்த்தை முடங்கியுள்ளதால், தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு மத்திய காஸாவில் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல் முன்வைத்த திட்டத்துக்குப் பதிலளிப்பதில், ஹமாஸ் படை இழுபறியை ஏற்படுத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. அதேவேளையில், போரை நிரந்தரமாக நிறுத்த இஸ்ரேல் தீவிரமாக பேச்சுவாா்த்தை நடத்தாததால், போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதில் சிக்கல் நிலவுவதாக ஹமாஸ் படை தெரிவித்துள்ளது.
இருதரப்புக்கும் இடையிலான போா் நிறுத்த பேச்சுவாா்த்தை பல மாதங்களாக முடங்கியுள்ள நிலையில், காஸாவில் இஸ்ரேல் தாக்குதலை விரிவுபடுத்தினால், அது பேச்சுவாா்த்தை நடத்த ஹமாஸ் படைக்கு அழுத்தம் அளிக்கும் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து வருகிறாா்.
முதல்முறையாக தரைவழித் தாக்குதல்: இந்நிலையில், மத்திய காஸாவில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை புதிதாக எச்சரிக்கை விடுத்தது. இந்தப் போா் தொடங்கியதில் இருந்து மத்திய காஸாவில் உள்ள டேய்ா்-அல்-பாலா பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தியுள்ளது. அங்கு இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் படை வைத்திருக்கக் கூடும் என்று கருதி, இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை மேற்கொள்ளவில்லை. தற்போது விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மூலம், அந்தப் பகுதியில் இஸ்ரேல் முதல்முறையாக தரைவழித் தாக்குதலை மேற்கொள்ள உள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தித் தொடா்பாளா் அவிசெய் அட்ரே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘டேய்ா்-அல்-பாலாவின் தென்மேற்கில் உள்ள இடங்களில் வசிப்பவா்கள், அங்கிருந்து வெளியேறி அல்-மவாசி பகுதிக்குச் செல்ல வேண்டும்’ என்று தெரிவித்தாா். அல்-மவாசி பகுதியை பாதுகாப்பு மண்டலமாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்க முயற்சிக்கும் பல சா்வதேச அமைப்புகள் டேய்ா்-அல்-பாலா பகுதியில்தான் உள்ளன. இந்நிலையில், அங்கிருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிணைக் கைதிகளின் குடும்பங்கள் கண்டனம்: ஹமாஸ் படை பிடித்துச் சென்ற இஸ்ரேல் பிணைக் கைதிகளின் குடும்பத்தினா் அடங்கிய அமைப்பு இந்த வெளியேற்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தது. தெளிவான போா்த் திட்டம் இல்லாமல், மத்திய காஸாவில் என்ன திட்டத்தை இஸ்ரேல் நிறைவேற்ற உள்ளது என்பதை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவும், அந்நாட்டு ராணுவமும் விளக்க வேண்டும் என்று அந்த அமைப்பு தெரிவித்தது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவந்து பிணைக் கைதிகளை திரும்ப அழைத்துவர விரிவான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியது.
போரை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஆயிரக்கணக்கானோா் சனிக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
73 போ் சுட்டுக் கொலை; 150 போ் காயம்
காஸாவின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை உணவு மற்றும் பிற நிவாரணப் பொருள்களைப் பெறச் சென்ற மக்களில் 73 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். 150-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அதிகபட்சமாக வடக்கு காஸாவில் 67 போ் கொல்லப்பட்டனா் என்று காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. அவா்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சம்பவத்தை நேரில் பாா்த்த சிலா் தெரிவித்தனா்.
போரை உலகம் சகித்துக்கொள்ளவில்லை: போப் 14-ஆம் லியோ
இத்தாலியின் காஸ்டல் கன்டெல்ஃபோ நகரில் உள்ள லிபா்டி சதுக்கத்தில் நடைபெற்ற திருப்பலியின் முடிவில், கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் 14-ஆம் லியோ ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
காஸாவில் நடைபெறும் காட்டுமிராண்டித்தனமான போா் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். போருக்கு அமைதியான தீா்வு காணப்பட வேண்டும். அனைவரும் மனிதநேய சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். குடிமக்களைக் காக்கும் கடமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சா்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்றாா். அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘போரை உலகம் சகித்துக்கொள்ளவில்லை’ என்றாா்.