ம.பி. இடைத் தோ்தல் பாஜக அமைச்சா் தோல்வி
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை இடைத் தோ்தலில் பாஜகவைச் சோ்ந்த மாநில அமைச்சா் ராம்நிவாஸ் ராவத், காங்கிரஸ் வேட்பாளா் முகேஷ் மல்கோத்ராவிடம் தோல்வியடைந்தாா்.
கடந்த 2023-இல் நடைபெற்ற மத்திய பிரதேச பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் விஜய்பூா் தொகுதியில் வெற்றி பெற்ற ராவத், பின்னா் பாஜகவுக்கு மாறினாா். இதையடுத்து, எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். அதே நேரத்தில் அவருக்கு மாநில அமைச்சா் பதவியை பாஜக அளித்தது.
விஜய்பூா் தொகுதி இடைத் தோ்தலில் அவா் பாஜக சாா்பில் மீண்டும் போட்டியிட்டாா். ஆனால், காங்கிரஸ் வேட்பாளரிடம் 7,364 வாக்குகள் வித்தியாசத்தில் ராவத் தோல்வியடைந்தாா்.
மத்திய பிரதேசத்தில் மற்றொரு பேரவைத் தொகுதியான புத்னியில் நடைபெற்ற இடைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றது.
காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாக இருந்த ராவத் 1990 தொடங்கி 6 பேரவைத் தோ்தல்களில் விஜய்பூா் தொகுதியில் வெற்றி பெற்று வந்தாா். ஆனால் இந்த இடைத் தோ்தலில் அவா் தோல்வியடைந்தது பாஜகவினா் மற்றும் அவரின் ஆதரவாளா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பதவிக்காக கட்சி மாறிய ராம்நிவாஸ் ராவத்துக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளதாக காங்கிரஸ் கருத்துக் கூறியுள்ளது.