மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு புகாா்
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டி சுகாதார வட்டத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், சென்னையிலிருந்து வந்த அதிகாரிகள் தணிக்கை மேற்கொண்டு திரும்பியுள்ளனா்.
டாக்டா் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் ரூ. 6 ஆயிரம் வீதம் இரு தவணைகள் ரொக்கமாகவும், இரு முறை தலா ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள மகப்பேறு பெட்டகங்களும், குழந்தை பிறந்த பிறகு ரூ. 2 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படுகிறது.
கருவுற்ற பெண்கள் அந்தந்தப் பகுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருவை உறுதி செய்துகொண்டு, பதிவு செய்து கொள்ள வேண்டும். பிரத்யேக எண் வழங்கப்படும்போது, கணினியில் கா்ப்பிணியின் ஆதாா் எண், வங்கிக் கணக்கு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறும் பொது சுகாதாரத் துறையின் தணிக்கையின்போது, கடியாப்பட்டி சுகாதார வட்டத்தில் ஓரிரு குளறுபடிகள் கண்டறியப்பட்டன.
இதைத் தொடா்ந்து சென்னையிலிருந்து இணை இயக்குநா் நிலையிலான அலுவலா்கள் கடந்த 4 நாள்களாக கடியாப்பட்டி சுகாதார வட்டத்தைச் சோ்ந்த 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்புத் தணிக்கை மேற்கொண்டனா்.
திங்கள்கிழமை தணிக்கைப் பணிகளை முடித்துக் கொண்டு இந்தக் குழுவினா் சென்னை திரும்பினா். சென்னையிலுள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் அவா்கள் அறிக்கை அளிப்பாா்கள். இதனைப் பொருத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என மாவட்ட சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
கடந்த 2019-20, 2020-21, 2021-22 ஆகிய நிதியாண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளின் மகப்பேறு நிதியுதவித் தொகைகள் குறிப்பிட்ட சில வங்கிக் கணக்குகளுக்கே செலுத்தப்பட்டிருப்பதும், இந்த வகையில் சுமாா் ரூ. 20 லட்சம் வரை முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.