கோவாவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு இட்லிதான் காரணம்: பாஜக எம்.எல்.ஏ. க...
மகா கும்பமேளா நிறைவு: தூய்மைப் பணிகளைத் தொடங்கி வைத்த முதல்வர் யோகி!
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கும்பமேளா நிறைவடைந்த நிலையில், தூய்மைப் பணிகளை அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கிவைத்தார்.
பிரம்மாண்ட ஆன்மிக திருவிழாவான கும்பமேளா நிகழ்ந்த 45 நாள்களும் பிரயாக்ராஜ் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. பிரம்மாண்ட முறையில் நிகழ்த்தப்பட்ட கும்பமேளாவில் சுமார் 66 கோடி பேர் புனித நீராடிச் சென்றனர். கும்பமேளா நடைபெற்ற இடத்தை தூய்மைப்படுத்தும் பணி இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் யோகி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
மகா கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்துவதற்குப் பங்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையாலும், அர்ப்பணிப்புள்ள தூய்மைப் பணியாளர்களின் ஆதரவாலும், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கனவு நனவாகியுள்ளது என்று அவர் கூறினார்.
அமைச்சர்களுடன் அரயில் காட் பகுதியில் தூய்மைப் பிரசாரத்தில் அவர் பங்கேற்றார். தூய்மைப்படுத்தும் பணிக்குப் பிறகு, முதல்வர் யோகி மற்றும் அவரது அமைச்சர்கள் திரிவேணி சங்கம் நோக்கி மிதவைக் கப்பலில் பயணித்தனர். பயணத்தின்போது, நீர்நிலைகளில் அமர்ந்திருந்த சைபீரியப் பறவைகளுக்குத் தானியங்களை வழங்கினார். திரிவேணி சங்கமத்தை அடைத்ததும், புனித சடங்கு ஒன்றை நிகழ்த்தினார். கண்ணுக்குத் தெரியாத வடிவங்களாகப் போற்றப்படும் அன்னை கங்கை, யமுனை, சரஸ்வதி தேவிக்கு மரியாதை செலுத்தினார். வேத மந்திரங்கள் முழங்க முதல்வர் யோகி, அமைச்சர்களுடன் இணைந்து கங்கைக்கு பால் அபிஷேகம் செய்து மக்களின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்து ஆரத்தி எடுத்தார்.
இந்த நிகழ்வில் துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌரியா, பிரஜேஷ் பதக், அமைச்சர்கள் சுரேஷ் கன்னா, ராகேஷ் சச்சன், நந்த் கோபால் குப்தா நந்தி, அனில் ராஜ்பர், தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் சிங், டிஜிபி பிரசாந்த் குமார் உள்பட பல மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இன்று முழுவதும், பிரயாக்ராஜில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் யோகி பங்கேற்க உள்ளார். 2025 மகா கும்பமேளாவின் வெற்றிக்கு பங்களித்த ஊழியர்கள் மற்றும் அமைப்புகளையும், பாதுகாப்பான சூழலைப் பராமரித்ததற்காக காவல்துறை அதிகாரிகளுக்கும் முதல்வர் யோகி தனது நன்றியைத் தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.