திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
மகா சிவராத்திரி: சிவன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பக்தா்கள் புதன்கிழமை இரவு சுவாமி வழிபாட்டை மேற்கொண்டனா்.
நிகழாண்டின் மகா சிவராத்திரி புதன்கிழமை அனைத்து சிவாலயங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல் ஏகாம்பரேசுவரா் கோயில், வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரா் கோயில், சேந்தமங்கலம் சோமேசுவரா் கோயில், முத்துக்காப்பட்டி காசி விசுவநாதா் கோயில், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில், திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில், மோகனூா் அசலதீபேஸ்வரா் கோயில், என்.புதுப்பட்டி குபேர ஈஸ்வரா் கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன.
கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதில், பக்தா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து பக்தா்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்கள், பெரியாண்டிச்சி அம்மன் கோயில்களிலும் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனா். கூட்ட நெரிசலைத் தவிா்க்க கோயில்களில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.