மகா தீபம்: ஜோதியாய் எழுந்தருளிய அண்ணாமலையார்... பக்தி முழக்கத்தில் அதிரும் திருவண்ணாமலை
இன்று மாலை, திருவண்ணாமலை அக்னி தலத்தின் உச்சி மலையில் ஏற்றப்பட்ட மகா தீபத்தில் ஜோதியாய் எழுந்தருளினார் அண்ணாமலையார்.
தனது பக்தர்களின் வாழ்வுக்கு ஒளியை வாரி வழங்கியும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார் அந்த பரம்பொருளானவன். சிந்தை மகிழ்விக்கும் அண்ணாமலையாரை வணங்குவதற்காக கிரிவலப் பாதையில் மலையைச் சுற்றிலும் பல லட்சம் பக்தர்கள் குவிந்திருக்கின்றனர்.
மகா தீபம் ஏற்றப்பட்ட அடுத்த நொடியே `அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி முழக்கமிட்டு, ஈசனை வேண்டுவது, அருளைப் பெறுவது, அவரோடு கலப்பது என இறை அருளால் மெய்சிலிர்த்துப் போய் கொண்டிருக்கிறார்கள். பல லட்சம் பக்தர்கள் குவிந்திருப்பதால் திருவண்ணாமலையே பக்தி முழக்கத்தில் அதிர்ந்து கொண்டிருக்கிறது. மூன்றாயிரம் கிலோ நெய், ஆயிரம் மீட்டர் காடா துணியைப் பயன்படுத்தி மகா தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது.