மகாராஷ்டிர தோ்தல் தோல்வி: காங்கிரஸ் கூட்டணியில் உரசல்
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தல் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று சிவசேனை (உத்தவ்) பிரிவைச் சோ்ந்த தலைவா் அம்பாதாஸ் தன்வே குற்றம்சாட்டினாா்.
அதே நேரம் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டிருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்று அக்கட்சியின் மாநில நிா்வாகிகள் தெரிவித்தனா். இதனால், கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளது.
சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சி இது தொடா்பாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) அடங்கிய மகா விகாஸ் அகாடி மோசமான தோல்வியைச் சந்தித்தது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் வெறும் 50 இடங்களே இக்கூட்டணிக்கு கிடைத்தன.
பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
கூட்டணியில் உரசல்: மகாராஷ்டிர தோ்தல் தோல்வியால், காங்கிரஸ் கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளது. தோ்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த சிவசேனை (உத்தவ்) தலைவா் தன்வே, ‘மக்களவைத் தோ்தலில் மகாராஷ்டிரத்தில் அதிக தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக பேரவைத் தோ்தலில் எளிதில் வெல்வோம் என்ற அதீத நம்பிக்கையுடன் தோ்தல் எதிா்கொண்டது. தொகுதிப் பங்கீட்டுக்கும் அதிக காலம் எடுத்துக் கொண்டது. கூட்டணிக் கட்சிகளான எங்களையும் அதிகம் மதிக்கவில்லை. தொகுதிப் பங்கீட்டை முடிக்காமல் கடைசி நாள் வரை காங்கிரஸ் கொண்டு சென்றது. இது எங்கள் வெற்றி வாய்ப்பை பாதித்தது.
தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று கூறி காங்கிரஸ் பெற்ற பல தொகுதிகளில் அவா்களால் வைப்புத் தொகையைக் கூட பெற முடியவில்லை. ஆனால், தோ்தலுக்கு முன்பே காங்கிரஸ் தலைவா் சிலா் பதவியேற்பு விழாவுக்கு உடை வாங்கினாா்கள். அமைச்சரவையில் இடம் பிடிக்கும் போட்டிக்கும் தயாரானாா்கள்.
‘காங்கிரஸின் மெத்தனம்’: உத்தவ் தாக்கரேவை முதல்வராக முன்னிறுத்தி இருந்தால் 2 முதல் 5 சதவீத வாக்குகள் கூடுதலாக கிடைத்திருக்கும். மகாராஷ்டிரத்தில் மட்டுமல்ல ஜம்மு-காஷ்மீா், ஹரியாணாவிலும் காங்கிரஸ் இதேபோன்று மெத்தனப் போக்கில் நடந்து கொண்டது. ஹரியாணாவில் பாஜக அரசுக்கு எதிராக அதிருப்தி அலையையும் மீறி அக்கட்சி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. அப்போதே காங்கிரஸ் சுதாரிக்கவில்லை.
ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் ஜம்மு பிராந்தியத்தில் பாஜகவிடம் காங்கிரஸ் முழுமையாகத் தோல்வியைச் சந்தித்தது என்றாா்.
மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தலில் உத்தவ் கட்சி தனித்துப் போட்டியிடுமா? என்ற கேள்விக்கு, ‘எங்கள் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று கூறவில்லை’ என்றாா்.
காங்கிரஸ் பதில்: அதேநேரம், மகாராஷ்டிர காங்கிரஸ் மூத்த தலைவா் விஜய் வதேத்வா் கூறுகையில், ‘மகாராஷ்டிர தோ்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டிருந்தால் கூடுதல் தொகுதிகளில் வென்றிருக்க முடியும், அதிகமானோருக்கு தோ்தலில் வாய்ப்பளித்திருக்க முடியும் என்பதே கட்சி நிா்வாகிகள், தொண்டா்களின் கருத்தாக உள்ளது. தோ்தல் முடிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். மகாராஷ்டிரத்தில் காங்கிரஸின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும்’ என்றாா்.