முதல் டெஸ்ட்: இருவர் அரைசதம்; முதல் நாளில் மே.இ.தீவுகள் 250 ரன்கள் குவிப்பு!
மகாராஷ்டிரத்தின் அடுத்த முதல்வர் யார்?
மகாராஷ்டிரம் பேரவைத் தோ்தல்களில் 288 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் சனிக்கிழமை (நவ.23) காலை 8 மணிக்கு தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணும் மையங்களில், அதிகாரிகள் முதலில் தபால் வாக்குகளை சரிபார்த்து எண்ணத் தொடங்கினர், அதனைத் தொடர்ந்து மின்னனு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரே இறுதியான முடிவுகள் வெளியாகும்.
ஆனால் இதுவரை வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, ஆளும் மகாயுதி கூட்டணி வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது உறுதியாகியுள்ளது.
மகாயுதி கூட்டணி முன்னிலை
மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 219 தொகுதிகளிலும், பாஜக 125 தொகுதிகளிலும், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 55 தொகுதிகளிலும், துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 39 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன. இதையடுத்து மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை(ஷிண்டே)-தேசியவாத காங்கிரஸ்(அஜீத் பவாா்) கட்சிகளின் ‘மகாயுதி’ கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான நிலை உருவாகியுள்ளது.
எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் 56 தொகுதிகளிலும், காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனை 19 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.
மகாயுதி கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகம்
மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை(ஷிண்டே)-தேசியவாத காங்கிரஸ்(அஜீத் பவாா்) கட்சிகளின் ‘மகாயுதி’ கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான நிலை உருவாகியுள்ளதை அடுத்து கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தானே நகரில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு இனிப்புகளை வழங்கி அவரது ஆதரவாளர்கள் கொண்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களுன் பேசிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரம் மக்களுக்கு நன்றி. இது மிகப்பெரிய வெற்றி. மகாயுதி கூட்டணி வெற்றி பெறும் என நான் கூறியிருந்தேன். தற்போது அது நிகழ்ந்துள்ளது. இந்த வெற்றியை அளித்த விவசாயிகள், பெண்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலத்தில் கடந்த 2.5 ஆண்டுகள் மகாயுதி கூட்டணி அரசின் மக்கள் பணிகளுக்கு கிடைத்த ஆங்கீகாரம் தான் இந்த வெற்றி என்றார்.
மேலும் வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், நாங்கள் ஒன்றாக தேர்தலில் போட்டியிட்டது போன்று, மூன்று கட்சியின் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து பேசி யார் முதல்வர் என்பது குறித்து முடிவெடுப்போம் என ஷிண்டே கூறினார்.
இதையும் படிக்க | 2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்
தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலை
இதனிடையே, நாக்பூரில் போட்டியிட்ட துணை முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் இருந்து வருவதை அடுத்து செய்தியாளர்களுடன் பேசிய அவரது தாயார் சரிதா ஃபட்னாவிஸ், நிச்சயம் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக தேர்வு செய்யப்படுவார். அவர் 24 மணி நேரமும் கடுமையாக உழைத்தார் என அவர் கூறினார்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜீத் பவாா் மூவருக்கும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் பல அரசியல் மாற்றங்களைக் கண்ட மாநிலம் என்பதால், பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.