மகாராஷ்டிரம்: அமைச்சரவை பகிர்மானம் முடிவு பெற்றதா?
மகாராஷ்டிர அமைச்சரவை பகிர்மானத்தில் முடிவு எட்டியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், அமைச்சரவைப் பகிர்வு இழுபறியாகவே இருந்து வருகிறது. இறுதியாக, அமைச்சரவைப் பகிர்வில் தீர்வு எட்டியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இதன்படி, முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார் இடையிலான (டிச. 10) சந்திப்பில் முக்கியமான துறைகளான உள்துறை, வருவாய் உள்ளிட்ட 22 துறைகளை பாஜகவும், நகர்ப்புற வளர்ச்சித் துறை உள்பட 11 துறைகளை சிவசேனையும், அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு 10 துறைகளும் பிரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர வீட்டுவசதி, நீர்வளத் துறைகளையும் பாஜக மேற்கொள்ளும் என்றும் பாஜக வட்டாரத்தில் கூறுகின்றனர். மேலும், பதவிகளைவிட உரிமை கோருபவர்களின் எண்ணிக்கை அதிகமிருப்பதால், நியமனங்களை தீர்மானிக்க கட்சிகள் சிரமப்படுகின்றன. நியமனங்கள் தொடர்பாக சிவசேனை கட்சியினுள் மோதல்களை எதிர்கொள்கிறது. விவசாயம், பொதுப்பணித் துறைகளுக்கு இரு கட்சிகள் போட்டி போடுவதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி, கடந்த அமைச்சரவையில் கறைபடிந்த அமைச்சர்களை நீக்குமாறு பாஜக வலியுறுத்தியது; ஆனால், அது கடினம் என்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிக்க:மக்களவைத் தலைவரைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி! ஏன்?
அமைச்சரவை குறித்த ஒப்புதலுக்காக முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் இரண்டு நாள் பயணமாக டிச. 11, 12 ஆகிய தேதிகளில் தில்லி செல்கிறார். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (டிச. 13) மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமையில் (டிச. 14) அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறலாம் அல்லது டிச. 21 ஆம் தேதியில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனை- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களில் வெற்றி பெற்றது. இக்கூட்டணியில் 132 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின. தனிபெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக சார்பில் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராக பதவியேற்றாா்.