அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 8 கைத்துப்பாக்கிகள் பறிமுதல்
மகாராஷ்டிரா: சமரசமான ஏக்நாத் ஷிண்டே; ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் முதல்வர் பதவி யாருக்கு?
அமித் ஷாவை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 23ம் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டது. இத்தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. ஆரம்பத்தில் தற்போது முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்து முரண்டு பிடித்தார். அதன் பிறகு ஏக்நாத் ஷிண்டே தனது முடிவில் இருந்து இறங்கி வந்து முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளார்.
ஆனால் அமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்வதில் பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தனக்கு உள்துறை அமைச்சகத்துடன் கூடிய துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கோரி வருகிறார். ஏக்நாத் ஷிண்டே அமித் ஷாவை தனியாக சந்தித்த போது தங்களது கட்சிக்கு உள்துறை அமைச்சர் பதவி அல்லது சபாநாயகர் பதவி கொடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் துணை முதல்வர் பதவி கொடுக்க தயார் என்றும், உள்துறை அமைச்சகம் கொடுக்க முடியாது என்று பா.ஜ.க கூறிக்கொண்டிருக்கிறது.
முதல் ஆளாக ஆதரவு கொடுத்த அஜித் பவார்
எனவே அதிருப்தியில் ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவர் வந்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. ஏக்நாத் ஷிண்டேயிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுப்பதாகவும் பா.ஜ.க தரப்பில் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த பதவி வேண்டாம் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துவிட்டார். மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சட்டமேலவை தலைவர் பதவியை தங்களது கட்சிக்கு கொடுக்கவேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறார். அவரது கோரிக்கைகளை ஏற்க முடியாத நிலையில் பா.ஜ.க இருக்கிறது. அதேசமயம் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவுடனான உறவு அதிகரித்துள்ளது. முதல் ஆளாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக அஜித்பவார் ஆதரவு கொடுத்தார்.
எனவே ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வந்தால் அஜித்பவாரின் ஆதரவோடு ஆட்சியமைக்கவும் பா.ஜ.க தயாராகி வருகிறது. அதேசமயம் இவ்விவகாரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் தலையிட வேண்டும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. அதிருப்தியில் சொந்த ஊருக்கு செல்லவில்லை என்றும், ஓய்வு எடுப்பதற்காக சென்று இருக்கிறேன் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூடி தங்களது சட்டமன்றத் தலைவரை தேர்ந்தெடுக்காமல் இருக்கின்றனர். இதனால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராவாரா அல்லது வேறு யாரையாவது முதல்வர் பதவிக்கு பா.ஜ.க முன்னிறுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திங்கள் கிழமைதான் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்று தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ்.ஆதரவு பெற்ற பா.ஜ.க எம்.பி.முரளிதர் மோஹோல் பெயர் முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது.
யார் முதல்வர்..?
மத்திய அமைச்சராக இருக்கும் முரளிதர் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர் ஆவார். அவரது பெயர் முதல்வர் பதவிக்கு அடிபடுவது குறித்து சோசியல் மீடியாவில் செய்திகள் வைரலாக பரவி இருக்கிறது. ஆனால் இச்செய்தி ஆதாரமற்றது என்று முரளிதர் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில்தான் தேர்தலை சந்தித்தோம். அவரது தலைமைக்குத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர். முதல்வர் பதவி குறித்து பா.ஜ.க பாராளுமன்ற குழு கூடி முடிவு செய்யும்'' என்று தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்திலும் 2017ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, முதல்வர் தொடர்பாக இரண்டு வாரங்கள் கழித்த பிறகு திடீரென யோகி ஆதித்யநாத் முதல்வராக அறிவிக்கப்பட்டார். அது போன்று மகாராஷ்டிராவிலும் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது என்று பா.ஜ.க தலைவர்களே தெரிவித்துள்ளனர். முதல்வர் பதவிக்கு சந்திரகாந்த் பெயரும் அடிபடுகிறது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக கட்சி தலைமை இன்னும் அனுமதி கொடுக்கவில்லை என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால் யார் முதல்வர் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.