மகாராஷ்டிரா: நம்பும் காங்கிரஸ்; கைகொடுக்குமா `விதர்பா’... மொத்தம் 75 தொகுதிகளில் பாஜக vs காங்கிரஸ்
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாளாகும். இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களது அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்திருக்கும் கட்சி நிர்வாகிகளை போட்டியில் இருந்து விலக கடைசி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய மிகவும் போராடின. அப்படி இருந்தும் கடைசி நாள் வரை கட்சிகள் போராடவேண்டிய நிலை இருந்தது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், ஆளும் மஹாயுதி கூட்டணியில் பா.ஜ.க அதிக தொகுதிகளும் போட்டியிடுகிறது. இதில் விதர்பாவில் தான் அதிகப்படியான இடங்களில், அதாவது காங்கிரஸ் 47 தொகுதியில் போட்டியிடுகிறது. விதர்பாவில் மொத்தம் 62 தொகுதிகள் இருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பகுதி தான் விதர்பா. இது மகாராஷ்டிராவின் மொத்தப்பரப்பில் 31.6% ஆகும். விதர்பாவில் காங்கிரஸ் ஆரம்பத்தில் அதிக செல்வாக்குடன் விளங்கியது.
ஆனால் 2014-ம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் தனது செல்வாக்கை பா.ஜ.கவிடம் பறிகொடுக்க ஆரம்பித்தது. ஆனாலும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் விதர்பா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க விதர்பாவில் உள்ள 62 தொகுதிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்படி மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அதோடு அமித் ஷா நாக்பூர் வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு சென்று இருக்கிறார். விதர்பாவில் தான் மகாராஷ்டிரா மூத்த பா.ஜ.க தலைவர்கள் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றனர். நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் போட்டியிடுகிறார். இது தவிர மாநில கட்சி தலைவர் சந்திரசேகர் பவன்குலே, அமைச்சர் சுதிர் முங்கந்திவார் போன்ற கட்சியின் மூத்த தலைவர்களும் விதர்பாவில்தான் தேர்தலை சந்திக்கின்றனர்.
இதே போன்று மாநில காங்கிரஸ் தலைவர் நானாபட்டோலே விதர்பாவில் உள்ள சிக்கோலி தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் விஜய், முன்னாள் அமைச்சர் நிதின் ராவுத், மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்ரே ஆகியோரும் விதர்பாவில் தேர்தலை எதிர்கொள்கின்றனர். நாக்பூர் மேற்கு தொகுதியில் நகர காங்கிரஸ் தலைவர் விகாஷ் தாக்ரேயை எதிர்த்து மாவட்ட பா.ஜ.க தலைவர் சுதாகர் போட்டியிடுகிறார். இரு கட்சிகளும் விதர்பாவில் மொத்தம் 35 தொகுதியில் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுகின்றன. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்த போது சிவசேனா(உத்தவ்) சில தொகுதிகளை காங்கிரஸ் கட்சியிடம் கேட்டது. ஆனால் காங்கிரஸ் அத்தொகுதிகளை கொடுக்க மறுத்தது.
அப்படி இருந்தும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் விதர்பாவில் 6 தொகுதியில் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் விதர்பாவை பெரிதும் நம்பி இருக்கிறது. இதே போன்று அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் 7 தொகுதியில் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுகின்றனர். மகாராஷ்டிரா முழுக்க காங்கிரஸும், பா.ஜ.கவும் 75 தொகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.கவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. எனவே சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. மும்பையில் தான் காங்கிரஸ் மிகவும் குறைவாக 11 தொகுதியில் போட்டியிடுகிறது. மும்பையில் காங்கிரஸ் கேட்ட சில தொகுதிகளை உத்தவ் தாக்கரே கொடுக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://bit.ly/47zomWY